விளையாட்டு

முதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்!

முதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்!

webteam

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இப்போது இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட போட்டி.

இந்திய அணியில் அஸ்வின், ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா அணியிடம் இடம் பிடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரராக ஆல்-ரவுண்டர் ஷமார் புரூக்ஸ் சேர்க்கப்பட்டார். மழை காரணமாக 15 நிமிடங்கள் தாமதமாக போட்டித் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து கே.எல். ராகுலும், மயங்க் அகர்வாலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். வெஸ்ட் இண்டீசின் வேகத்தில் இந்திய வீரர்கள் தடுமாறினர். மயங்க் அகர்வால் (5 ரன்), புஜாரா (2) ஆகியோர் கெமர் ரோச்சில் பந்திலும் கேப்டன் விராத் கோலி (9) கேப்ரியலின் பந்து வீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதனால் இந்திய அணி, 7.5 ஓவரில் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது.

பின்னர், ராகுலும் அவருடன் இணைந்த ரஹானேவும் அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். ஸ்கோர் 93 ரன்களாக உயர்ந்த போது ராகுல் 44 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஹனுமா விஹாரி வந்தார். அவர் 32 ரன்கள் எடுத்திருந்த போது கெமர் ரோச் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷாப் வந்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், நிதானமாக ஆடிய ரஹானே அரை சதம் அடித்தார். அவர் 81 ரன்கள் எடுத்திருந்த போது, கேப்ரியல் பந்தில் போல்டானார். இதையடுத்து ரிஷாப் பன்டுடன் ஜடேஜா இணைந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷாப் 20 ரன்களுடனும் ஜடேஜா 3 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 3 விக்கெட்டும் கேப்ரியல் 2 விக்கெட்டும் சேஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.