விளையாட்டு

பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!

பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!

EllusamyKarthik

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 14வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்திருந்தார். அதன்படி அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை எடுத்துள்ளது. 

பஞ்சாப் அணிக்காக கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இன்னிங்ஸை ஓப்பன் செய்திருந்தனர். ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ராகுல், புவனேஷ்வர் வேகத்தில் வீழ்ந்தார். தொடர்ந்து கலீல் அகமது வீசிய ஏழாவது ஓவரில் மயங்க் அகர்வாலும் 22 ரன்களுக்கு நடையை கட்டினார். 

ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் நிக்கோலஸ் பூரன், வார்னரின் அற்புதமான டைரக்ட் ஹிட்டால் ரன் அவுட்டானார். அதற்கடுத்த ஓவரில் ரஷீத் சுழலில் கெயில் LBW முறையில் விக்கெட்டை இழந்தார். அபிஷேக் ஷர்மா பந்துவீச்சில் தீபக் ஹூடா மற்றும் ஹென்ரிக்ஸ் அடுத்தடுத்து ஓவர்களில் விக்கெட்டை இழந்தனர். பாபியான் ஆலனும் கலீல் அகமது பந்து வீச்சில் சாய்ந்தார். 

இப்படியாக பஞ்சாப் அணி விக்கெட்டை ஒரு பக்கம் இழந்து கொண்டிருக்க தமிழகத்தை சேர்ந்த ஷாருக் கான் அந்த அணிக்காக கிரீஸில் கொஞ்சம் நிலைத்து நின்று ஆடினார். 17 பந்துகளில் 22 ரன்களை அடித்து அவுட்டானார். தொடர்ந்து முருகன் அஷ்வின், முமாது ஷமி அவுட்டாகி இருந்தனர்.  அதனால் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை பதிவு செய்திருந்தது. சென்னை மைதானத்தில் இரண்டாவதாக பேட் செய்வது கடினம் என பிட்ச் ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருந்தது. அதையெல்லாம் தகர்த்தெறிந்து ஹைதராபாத் அணி இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்கிறதா என பார்ப்போம். அந்த அணியின் வெற்றிக்கு 120 பந்துகளில் 121 ரன்கள் தேவை.