விளையாட்டு

புரோ கபடி: இறுதிபோட்டியில் குஜராத்தை எதிர்கொள்ளப்போவது யார்?

புரோ கபடி: இறுதிபோட்டியில் குஜராத்தை எதிர்கொள்ளப்போவது யார்?

webteam

புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

5வது புரோ கபடி லீக் தொடர் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. மும்பையில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் கொல்கத்தாவைச் சேர்ந்த பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணி 42-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. இந்த அணியை எதிர்த்து இறுதி ஆட்டத்தில் விளையாடும் அணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

பெங்கால் வாரியர்ஸ் அணி இறுதிபோட்டிக்கு முன்னேற இன்னும் வாய்ப்பு உள்ளது. முதல் தகுதிச்சுற்றில் அந்த அணி தோல்வி அடைந்தாலும் இரண்டாவது தகுதி சுற்றில் ஆடும் வாய்ப்பு அந்த அணிக்கு உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம்.

நேற்று நடைப்பெற்ற மூன்றாவது நாக் அவுட் சுற்று போட்டியில் புனேரி பல்டன்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி 42 - 32 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது தகுதிசுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளது. பெங்கால் வாரியர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் நாளை நடைபெறவுள்ள தகுதிச்சுற்று போட்டியில் மோதுகின்றன. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணியை தேர்வு செய்யும் இந்த போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.