தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளருமான ஜான்டி ரோட்ஸ் ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் பயிற்சி ஆட்டம் நடத்துவது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அடுத்த சில வாரங்களில் ஐ.பி.எல் தொடர் துபாயில் ஆரம்பமாக உள்ள நிலையில் அவர் இந்த கருத்தை பி.டி.ஐ நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
“கொரோனா ஊரடங்கினால் வீரர்கள் எல்லோரும் கடந்த சில மாதங்களாக களத்தில் போட்டிகள் எதுவும் விளையாடாமல் உள்ள நிலையில் தான் ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ளனர்.
அனைவரும் வலை பயிற்சியில் சிறப்பாக விளையாடுகின்றனர். மைதானத்தின் 360 டிகிரியிலும் பந்தை அடித்து ஆடுகிறார்கள். இருந்தாலும் வலை பயிற்சிக்கும், ஆட்டத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. வலை பயிற்சியில் ஒரு பந்தை மிஸ் செய்தாலும் அடுத்த பந்தில் அடித்துக் கொள்ளலாம். ஆனால் ஆட்டத்தில் அப்படி முடியாது. அதனால் வீரர்கள் ஆட்டத்தின் மைண்ட்செட்டிற்கு ஏற்ப பக்குவப்படுத்த இந்த முறை ஐ.பி.எல் ஆரம்பமாவதற்கு முன்னர் பயிற்சி ஆட்டம் நடத்துவது அவசியம் என கருதுகிறேன்.
மேலும் கொரோனாவினால் வீரர்கள் எல்லோரும் குடும்பத்தை பிரிந்துள்ள வேளையில் அவர்களை ஆக்டிவாக வைத்துக்கொள்ள அவர்களோடு பயிற்சியாளர்கள் பேசுவதும் அவசியம் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார் ஜான்டி ரோட்ஸ்.