விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டிற்கு முகத்தில் வெட்டு காயங்கள் மற்றும் முழங்கால், கணுக்கால்களில் படுகாயம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அவருடைய மருத்துவ சிகிச்சையின் எம்ஆர்ஐ விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், இன்று காலையில் உத்தரகண்ட்டின் ஹரித்வார் மாவட்டத்திலுள்ள தன் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, ஹம்மத்பூர் ஜால் என்ற பகுதியிலுள்ள எல்லைப்பகுதியில் அவர் கார் விபத்துக்கொள்ளாகியுள்ளது. அங்கிருந்த டிவைடரில் கார் மோதிய நிலையில், தீப்பற்றி எரியத்தொடங்கியது. அப்போது கார் கண்ணாடியை உடைத்துகொண்டு ரிஷப் பண்ட் வெளியில் வந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நெற்றியில் இரண்டு வெட்டுக்காயங்கள், அவரது முழங்கால் தசைநார் கிழிந்து படுகாயம், கணுக்கால் மற்றும் கால் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், காரில் இருந்து குதித்ததால் முதுகில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்த மருத்துவர்கள், பண்ட்டின் உடல்நிலை உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் சீராக இருப்பதாக அறிவித்தனர்.
மேலும், ரிஷப் பண்ட்டின் முழங்காலில் எவ்வளவு காயங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைக் கண்டறிய MRI அறிக்கைக்காக காத்திருந்தன. பின்னர், பண்ட்டின் எம்ஆர்ஐ அறிக்கை வெளிவந்துவிட்டதாகவும், ஆனால் சில காரணங்களால் எம்ஆர்ஐ அறிக்கை ஊடகங்களில் பகிரப்படவில்லை என்றும், அவருடைய முழங்கால் காயங்கள் குணமடைய 6 முதல் 8 மாதங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது. மற்றும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் தற்போது ரிஷப் பண்டின் எம் ஆர் ஐ முடிவுகள் வெளியாகியுள்ளன. எம்ஆர்ஐ முடிவுகளின் படி, “ ரிஷப் பண்டின் மூளை மற்றும் முதுகெலும்பில் எந்தவித பாதிப்பும் இன்றி சாதரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்கள், சிதைந்த காயங்கள் மற்றும் சிராய்ப்புகளுக்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கணுக்கால் மற்றும் முயங்கால்களில் நாளை எம் ஆர் ஐ செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”