அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் உள்ளன. மற்ற ஐந்து அணிகளும் அதற்கடுத்த இடங்களில் உள்ளன.
இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்போடு அணிகளால் பெரிய விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்களால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. தங்களது மோசமான ஆட்டங்களால் ர சிகர்களையும் ஏமாற்றி வருகின்றனர்.
அதில் டாப் 5 இடங்களில் உள்ள வீரர்கள் யார்? யார்? என்று பார்ப்போம்…
பேட் கம்மின்ஸ்
15.5 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது. சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு விளையாடிய அனுபவம் கொண்டிருப்பதால் அது ஐபிஎல் களத்தில் கொல்கத்தாவின் வெற்றிக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர் எதிராக அமைந்துள்ளது கம்மின்ஸின் ஆட்டம்.
ஒன்பது ஆட்டங்கள் விளையாடியுள்ள அவர் வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இருப்பினும் பேட்டிங்கில் கொஞ்சம் நம்பைக்கை கொடுத்து வருகிறார்.
மேக்ஸ்வெல்
கிரிக்கெட் உலகின் ‘பிக் ஷோ’ என ரசிகர்களால் போற்றப்படும் மேக்ஸ்வெல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 10.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 2014 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக ஒன் மேன் ஷோ ஆடியிருந்தார் மேக்ஸ்வெல். இருப்பினும் இந்த சீசனில் 9 ஆட்டங்கள் விளையாடியுள்ள அவர் வெறும் 58 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிராக ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியுள்ளார். இந்த சீசனுக்கு முன்னர் இங்கிலாந்து தொடரில் நல்ல ஃபார்மில் விளையாடிய மேக்ஸ்வெல் ஏனோ இதில் மட்டுமே ஃபார்ம் அவுட்டாகியுள்ளார்.
காட்ரல்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷெல்டன் காட்ரல் ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக இந்தியாவில் நடந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி பலரது கவனத்தை திருப்பியிருந்தார்.
அதனடிப்படையில் பஞ்சாப் அணி காட்ரலை 8.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இருப்பினும் ஆறு ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் வெறும் ஆறு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். மாறாக ஓவருக்கு 8.8 ரன்களை விட்டுக் கொடுத்து வருகிறார் அவர்.
ராபின் உத்தப்பா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ராபின் உத்தப்பா இந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதும் சோபிக்கவில்லை. எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் வெறும் 128 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
அதில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கி 41 ரன்களை சேர்த்து இப்போது தான் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
ஜேம்ஸ் நீஷம்
பஞ்சாப் அணிக்காக 50 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதில் பத்து ஓவர்களை வீசிய அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். ஒரே ஒரு இன்னிங்ஸில் மட்டும் பேட்டிங் செய்து 7 ரன்களை எடுத்துள்ளார்.