விளையாட்டு

'பணத்தை கட்டினாதான் உலகக் கோப்பையை நடத்த முடியும்' பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை

'பணத்தை கட்டினாதான் உலகக் கோப்பையை நடத்த முடியும்' பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை

webteam

2021 சாம்பியன்ஸ் கோப்பை, 2023 உலகக் கோப்பையை நடத்த வேண்டும் என்றால் ரூ.160 கோடியை உடனே பிசிசிஐ செலுத்த வேண்டும் என ஐசிசி எச்சரித்துள்ளது. கடந்த 2016-இல் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இந்திய சட்டத்தின்படி வரித்தொகையை பிடித்தம் செய்து கொண்டு பிசிசிஐ, அதிகாரபூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் டிவி உள்ளிட்டவை மீதித்தொகையை ஐசிசிக்கு செலுத்தின. 

மத்திய, மாநில அரசுகள் வரிச்சலுகை வழங்கும் என ஐசிசி எதிர்பார்த்த நிலையில் எந்த சலுகையும் கிடைக்கவில்லை. இதனால் ஐசிசி அதிருப்தி அடைந்தது. இந்நிலையில் ஐசிசியின் தற்போதைய தலைவராக இந்தியாவின் ஷசாங்க் மனோகர் உள்ளார். கடந்த அக்டோபரில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஐசிசி வாரிய கூட்டத்தில் இழப்பீடாக ரூ.160 கோடியை பிசிசிஐ செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை அத்தொகையை பிசிசிஐ திருப்பித் தரவில்லை. இந்நிலையில் வரும் 31-ஆம் தேதிக்குள் பிசிசிஐ அத்தொகையை செலுத்த வேண்டும். இல்லையென்றால் 2021 சாம்பியன்ஸ் கோப்பை, 2023 உலகக் கோப்பை போட்டியை நடத்த முடியாது. 

மேலும் அவற்றை வேறிடத்துக்கு மாற்றி விடுவோம் என ஐசிசி எச்சரித்துள்ளது.  பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாகக் குழு சிஓஏவுக்கு இதில் முடிவெடுக்க இன்னும் 10 நாள்களே உள்ளது. மேலும் இத்தொகையை தராவிட்டால், இந்தாண்டுக்கான இந்தியாவுக்கு வழங்க வேண்டிய வருவாயில் இருந்து அத்தொகையை பிடித்தம் செய்வோம் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.ஆனால் வரி சலுகைக்கு இந்தியா ஒப்புக் கொண்டதாக ஐசிசி கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்களை தனக்கு வழங்க வேண்டும் என பிசிசிஐ கோரியது. ஐசிசி விவரங்களை தந்தால் மட்டுமே பணத்தை செலுத்த முடியும் எனக் கூறியது. இந்திய வருவாயில் பணத்தை பிடித்தம் செய்தால், சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி என்ற பெயரில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.டெல்லியை சேர்ந்த கீதாராணி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், “ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. ஆனால் அரசின் அங்கீகாரம் இல்லாமல் கிரிக்கெட்டை பிசிசிஐ நிர்வகிக்கிறது. எனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி என்ற பெயரில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்த  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும், அரசு அமைப்பு என அறிவிக்க மறுத்து வரும் பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அத்துடன்  பிரிட்டீஷ் ஆட்சி கால நட்சத்திர சின்னத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பயன்படுத்துவது சின்னங்கள் சட்டத்திற்கு விரோதமான செயல் என்றும், வீரர்கள் தேர்விலும் வெளிப்படைதன்மை இல்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது எனவும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்ய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக மத்திய அரசு, பிசிசிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான வழக்கு பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.