விளையாட்டு

சஸ்பெண்ட் ரத்து: நியூசி. செல்கிறார் பாண்ட்யா, இந்திய ஏ அணியில் ராகுல்!

சஸ்பெண்ட் ரத்து: நியூசி. செல்கிறார் பாண்ட்யா, இந்திய ஏ அணியில் ராகுல்!

webteam

ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீதான இடைக்கால தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் திரும்ப பெற்றதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியில் இணைவதற்காக, ஹர்திக் பாண்ட்யா நியூசிலாந்து செல்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் இந்திப் பட இயக்குனர் கரண் ஜோஹரின் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். இது பிரச்னையானது. இதையடுத்து, இருவரும் மன்னிப்புக் கேட்டனர். கரண் ஜோஹரும் வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உத்தர விட் டது. ஆஸ்திரேலியாவில் விளையாட சென்றிருந்த இருவரும் நாடு திரும்பினர். 

இவர்கள் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி, விசாரணை அதிகாரியை நியமிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை விரைவில் வர இருக்கிறது. 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய, பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணா உள்ளிட்ட பலரும் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஏற்கனவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்களில் விசாரணை நிலுவையில் உள்ள வீரர்கள் பலரும் விளையாடி வரும் நிலையில், இவர்கள் மீது மட்டும் ஏன் தடை என்று பிசிசிஐ அதிகாரிகள் சிலரே கருத்து தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து அவர்கள் மீதான இடைக்கால தடையை பிசிசிஐ திரும்ப பெற்றுள்ளது. விசாரணை அதிகாரியை உச்சநீதிமன் றம் நியமித்த பின்னர், இருவர் மீதான விசாரணை தொடரும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை நீக்கப்பட்டதை அடுத்து, ஹர்திக் பாண்ட்யா, நியூசிலாந்தில் விளையாடும் இந்திய அணியுடன் இணைகிறார். இதற்காக அவர் விரைவில் அங்கு செல்கிறார். கே.எல்.ராகுல், இந்திய ஏ அணியுடன் இணைகிறார். இந்திய ஏ அணி, இலங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் ஐநது ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஒரு போட்டி முடிந்த நிலையில் அடுத்த போட்டி, திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.