ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. அதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக விளையாடி பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் அக் 2 (7) மற்றும் ஃபகார் 0 (9) ரன்களில் வெளியேறினர். இதையடுத்து வந்த பாபர் அசாம் மற்றும் சொயப் மாலிக் ஆகியோர் நிலைத்து விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர்.
இந்திய அணியும் அடுத்த விக்கெட்டை சாய்ப்பதற்காக பல யுக்திகளை கையாண்டது. ஆனால் விக்கெட் விழவில்லை. இந்நிலையில் தான் ஹர்டிக் பாண்ட்யா பந்து வீச வந்தார். அது இந்திய தரப்பில் இருந்து வீசப்படும் 18வது ஓவர். அத்துடன் ஹர்டிக் பாண்ட்யா வீசும் 5வது ஓவர். பந்துவீச வேகமாக ஓடி வந்த பாண்ட்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டது. சக வீரர்கள் ஓடிவந்து அவரை பரிசோதித்தனர். பின்னர் மருத்துவக்குழு வந்து பரிசோதித்துவிட்டு, பாண்ட்யாவை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்சென்றது. அவர் விரைவில் குணமடைய அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தூக்கி செல்லப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவின் இப்போதைய நிலை என்ன ? அடுத்தப் போட்டியில் பங்கேற்பாறா என பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டு வந்தனர். இதற்கு பிசிசிஐ செய்தித் தொடர்பாளர் பாண்ட்யாவின் உடல் நிலை குறித்து விளக்கமளித்துள்ளார் அதில் "ஹர்டிக் பாண்டியாவிற்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.தற்போது அவரால் எழுந்து நிற்க முடிகிறது. மருத்துவக் குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் கடுமையான வெயில் நிலவுகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற துபாயில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுபோன்ற சமயங்களில் வீரர்கள் அதிகப்படியான நீர் ஆகாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான வெயிலில் விளையாடும் வீரர்களின் உடலில் இருக்கும் நீர்சத்து வெளியேறிவிடும். இதனால் தசைப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஹர்டிக் பாண்ட்யாவுக்கும் அப்படிப்பட்ட பிரச்சனை தான் விரைவில் சரியாகிவிடும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.