விளையாட்டு

“அந்த பந்து வீச்சு முறையற்றது”-பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் ஹஸ்னைன் பந்துவீச ஐசிசி தடை

“அந்த பந்து வீச்சு முறையற்றது”-பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் ஹஸ்னைன் பந்துவீச ஐசிசி தடை

சங்கீதா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் பந்து வீச்சாளரான முகமது ஹஸ்னைன், சர்வதேசப் போட்டிகளில் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது.

21 வயதாகும் முகமது ஹஸ்னைன், சிட்னி மைதானத்தில் சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் இடையேயான பிக் பாஷ் லீக் (பி.பி.எல்.) போட்டியில், சிட்னி தண்டருக்காக பந்துவீசினார். அப்போது நடுவர் ஜெரார்ட் அபூட், முகமது ஹஸ்னைன் தவறான முறையில் பந்து வீசுவதாக தெரிவித்தார். இதனால், முகமது ஹஸ்னைன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜனவரி 19-ம் தேதி முகமது ஹஸ்னைன், ஆஸ்திரேலியாவில் பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட இருந்தார். ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டியிருந்ததால், ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட லாகூரில் உள்ள சோதனை மையத்தில் முகமது ஹஸ்னைன் சோதனைக்கு உட்படுத்தப் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சோதனை ஆய்வகத்தில் முகமது ஹஸ்னைனின் பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், அவரது பந்து வீச்சு முறையற்றது என்று கண்டறியப்பட்டது. முகமது ஹஸ்னைன் லாங், ஸ்லோ பவுன்சிங், பவுன்சிங் என அனைத்துவிதத்திலும் பந்தை டெலிவரி செய்யும்போது, அவர் தன் கை முட்டியை மடக்குவது என்பது தேவையான 15 டிகிரி வரம்பை மீறுவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முகமது ஹஸ்னைன் பந்துவீச்சு பற்றி புகார் அளிக்கப்பட்டது சரிதான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது. இதையடுத்து முகமது ஹஸ்னைன் சர்வதேசப் போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முகமது ஹஸ்னைனுக்கு ஒரு பந்துவீச்சு ஆலோசகரை வாரியமே நியமிக்கும் என்றும், அந்த ஆலோசகர் முகமது ஹஸ்னைன் பந்துவீச்சை சரிசெய்வார் என்றும் கூறியுள்ளது.

இதன்பின்னர் முகமது ஹஸ்னைன் மறுமதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டு, மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கூறியுள்ளது. தற்போது ஐசிசி தடை விதித்துள்ளதால், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தொடர்ந்து பங்கேற்க முகமது ஹஸ்னைன் அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் பிசிபி கூறியுள்ளது.

மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியிலும் முகமது ஹஸ்னைன் இடம்பெறமாட்டார் என்றும் பிசிபி தெரிவித்துள்ளது. முகமது ஹஸ்னைன் பாகிஸ்தானுக்காக, எட்டு ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அக்டோபர் 2019-ல், இலங்கைக்கு எதிரான T20I போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஹஸ்னைன் சாதனை புரிந்துள்ளார்.