ஐதராபாத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன. இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக மும்பை கோப்பையை வென்றது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
மும்பை வெற்றிப் பெற்றாலும், சிஎஸ்கே தோல்விக்கு மிக முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கிறது. அது ஆட்டத்தின் கடைசி ஓவரில் வாட்சன் ரன் அவுட்டானதும். அதற்கு முன்பு தோனி ரன் அவுட்டானதும்தான். இதில் வாட்சன் ரன் அவுட் எந்தவொரு சர்ச்சையையும் கிளப்பவில்லை. ஆனால், தோனியின் ரன் அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மூன்றாவது அம்பயர் கொடுத்த தீர்ப்பு தவறு என்று ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட அவுட் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
என்ன நடந்தது ?
ஐதராபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை அணி 149 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி மூன்று விக்கெட்களை விரைவாக இழந்தது. பின்பு, வாட்சனுடன் சிஎஸ்கே கேப்டன் தோனி களமிறங்கினார். அவர் 2 ரன்கள் எடுத்து இருந்தபோது, ஹர்திக் பண்டியா பவுலிங்கில் ஒரு ரன் எடுத்தார். மலிங்கா பந்தை எடுத்து எறிந்த போது, ஓவர் த்ரோ ஆனது. அதை பயன்படுத்தி இரண்டாவது ரன் ஓடினார் தோனி. அப்போது பந்தை எடுத்த இஷான் கிஷன் நேராக ஸ்டம்ப்பில் அடிக்க, ரன் அவுட் கேட்டனர் மும்பை வீரர்கள். பின்னர், கள நடுவர்கள் மூன்றாவது அம்பயருக்கு சென்றது.
ரீப்ளேவில், தோனி க்ரீஸ்ஸின் நுனியில் பேட்டை வைக்கவும், பந்து ஸ்டம்ப்பில் படவும் சரியாக இருந்தது. பல கேமரா கோணங்களில் பார்த்த பின்னரும், தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. தோனியின் பேட்டும் க்ரீஸ் கோட்டை மெலிதாக தொட்டும் இருந்தது. ஆனால் வைட் ஆங்கிளில் தோனி க்ரீஸை ரீச் செய்யாததும் தெரிந்தது. ஆனால் நீண்ட யோசனைக்கு பின்பு, மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது ?
கிரிக்கெட் விதிபடி " Benefit of the doubt goes to batsmen" என்ற ஒரு வாசகம் இருக்கிறது. அதாவது இதுபோன்று சந்தேகம் இருக்கும் சூழலில், சரியாக கணிக்க முடியாத நிலையில், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகத்தான் அம்பயர்கள் முடிவு எடுப்பார்கள். ஆனால், நேற்று தோனிக்கு எதிராக அவுட் கொடுக்கப்பட்டது. இது அவுட்டுதான் என்றும் அவுட் இல்லை என்ற சர்ச்சை சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.