டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பதற்கான விசாவை உடனடியாக வழங்க சாய்னா நேவால் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் வரும் 15ஆம் தேதி டென்மார்க்கில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டி தொடரில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இவர்கள் இருவருக்கும் டென்மார்க் செல்வதற்கான விசா இன்னும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், “நான் உங்களிடம் ஒரு அவசர கோரிக்கையை வைக்கிறேன். எனக்கும் எனது டிரைனருக்கும் டென்மார்க் செல்ல விசா இன்னும் கிடைக்கவில்லை. எனக்கு அடுத்த வாரம் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் உள்ளது. அடுத்த செவ்வாய்கிழமை போட்டிகள் தொடங்க உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
விசா வழங்கும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றமே இதற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. ஏனென்றால் தற்போது உள்ள முறைப்படி டென்மார்க் நாட்டிற்கு விசா பெற விரும்பும் நபர்கள் டெல்லியிலுள்ள தூதரகத்திற்கு கண்டிப்பாக நேர்காணலுக்கு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.