விளையாட்டு

பவர் ப்ளேவில் குறைவான ஸ்கோர்: முதலிடம் பிடித்த நியூசிலாந்து 

பவர் ப்ளேவில் குறைவான ஸ்கோர்: முதலிடம் பிடித்த நியூசிலாந்து 

webteam

நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் 10 ஓவர்களில் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற தேவையற்ற சாதனைக்கு நியூசிலாந்து அணி சொந்தமாகியுள்ளது. 

நடப்பு உலகக் கோப்பையின் முதல் அரை இறுதிப் போட்டி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே மான்சஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்டில் ஒரு ரன்னில் பும்ரா பந்துவீச்சில் வெளியேறினார். 

இதனைத் தொடர்ந்து நிகோலஸ் உடன் ஜோடி சேர்ந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு வெறும் 27 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது நடப்பு உலகக் கோப்பை தொடரில் எடுக்கப்பட்ட மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு நடப்பு தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதல் 10 ஓவர்களில் எடுத்த 28 ரன்களே குறைந்த ஸ்கோராக இருந்தது. 

மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்திருந்தது. அதேபோல ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் நியூசிலாந்து அணி 31 ரன்கள் எடுத்தது. ஆகவே முதல் 10 ஓவர்களில் எடுக்கப்பட்ட 5 குறைவான ஸ்கோர்களில் நியூசிலாந்து அணி 3 முறை வருவது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தப் போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.