விளையாட்டு

உலகக் கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டே உயிரிழந்த நீஷம் ‘கோச்’

உலகக் கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டே உயிரிழந்த நீஷம் ‘கோச்’

rajakannan

பரபரப்பான உலகக் கோப்பை சூப்பர் ஓவரை பார்த்துக் கொண்டிருந்த போது ஜிம்மி நீஷமின் பள்ளி கிரிக்கெட் பயிற்சியாளர் உயிரிழந்தார்.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இதுவரை பார்த்திராத அளவிற்கு இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி அவ்வளவு பரபரப்பாக நடைபெற்றது. போட்டி சமனில் முடிந்து சூப்பர் ஓவர் வரை சென்றது. அத்துடன் முடியாமல், இருவரும் தலா 15 ரன்கள் அடிக்க சூப்பர் ஓவரும் டையில் முடிவடைந்தது. ஐசிசி விதிகளில் அதிக  பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஜிம்மி நீஷமின் பள்ளிக்கால பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கார்டன், சூப்பர் ஓவரின் போது உயிரிழந்தார். நீஷம் சூப்பர் ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்த அந்த தருணத்தில் கார்டன் உயிர் பிரிந்ததாக அவரது மகள் கூறியுள்ளார்.

ஆக்லாந்து கிராமர் பள்ளியில் ஆசிரியராகவும், நீஷமிற்கு விளையாட்டு பயிற்சியாளராகவும் இருந்தவர் கார்டன். ஜிம்மி நீஷம் மட்டுமல்லால், லாக்கி பெர்கூஷன் உள்ளிட்ட பலருக்கும் அவர் பயிற்சி அளித்தவர் ஆவார். 25 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட் மற்றும் ஹாக்கி பயிற்சியாளராக அவர் இருந்துள்ளார்.

தன்னுடைய பள்ளி பயிற்சியாளர் கார்டன் உயிரிழந்தது குறித்து ஜிம்மி நீஷம் தன்னுடைய ட்விட்டரில், “டேவ் கார்டன், என்னுடைய பள்ளி ஆசிரியர், பயிற்சியாளர் மற்றும் நண்பர். கிரிக்கெட்டின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது. உங்களுக்கு கீழ் பயிற்சி எடுத்துக் கொண்டது எங்களது அதிர்ஷடம். போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளீர்கள். நீங்கள் நிச்சயம் பெருமை அடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி. உங்களுக்கு எனது இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார்.