டி-20 போட்டியில் சேஸிங்கின்போது சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் பரஸ் கட்கா படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே-நேபாளம்- சிங்கப்பூர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு போட்டி, சிங்கப்பூரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் சிங்கப்பூர்- நேபாள அணிகள் மோதின. முதலில் ஆடிய சிங்கப்பூர் அணி, 20 ஒவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நேபாள அணி. அந்த அணியின் கேப்டன் பரஸ் கட்கா அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதமடித்தார். அவர் மொத்தம் 106 சேர்த்தார். இதன் மூலம் டி-20 வரலாற்றில் சேஸிங்கில் சதம் அடித்த முதல் கேப்டன் சாதனையை அவர் பெற்றார்.
ஏற்கனவே ஒரு நாள் போட்டியில், சதம் அடித்த முதல் நேபாள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள பரஸ், டி-20 போட்டி யிலும் சதமடித்த முதல் நேபாள வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சேஸிங்கில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் இங்கிலாந்துக்கு எதிராக 90 ரன்களும் கிறிஸ் கெய்ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 88 ரன்களும், விராத் கோலி, இலங்கைக்கு எதிராக 82 ரன்களும் எடுத்துள்ளனர்.