விளையாட்டு

அப்போது விவசாயி மகன், இப்போது தங்க மகன் !

அப்போது விவசாயி மகன், இப்போது தங்க மகன் !

ஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிச் சுற்றில் அபாரமாக செயல்பட்ட நீரஜ் (20 வயது) 88.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். சீனாவின் லியு கிஸென் (82.22 மீ.) வெள்ளிப் பதக்கமும், பாகிஸ்தானின் நதீம் அர்ஷத் (80.75 மீ.) வெண்கலமும் வென்றனர்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ், 2016 ஆம் ஆண்டு போலந்தில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார். உலக தடகளத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர். 20 வயதேயான நீரஜ் சோப்ரா சண்டிகர் டி.ஏ.வி. கல்லூரியில் படித்து வருகிறார். 

கடந்த காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மீது நாட்டின் மொத்த கவனமும் இருந்தது. ஆசியப் போட்டியிலும் அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடந்த ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் முதல் முறை நீரஜ் 83.46 மீ, இரண்டு முறை தவறுகள் புரிந்த நிலையில், 5-ஆவது முறை 88.06 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றார்.

தனிப்பட்ட சாதனை மற்றும் புதிய தேசிய சாதனையும் படைத்தார் நீரஜ் சோப்ரா. ஆசியப் போட்டி ஈட்டி எறிதலில் கடந்த 1982-இல் குர்தேஜ் சிங் வெண்கலம் வென்றதே அதிகபட்சமாக இருந்தது. அதையும் முறியடித்து தங்கம் வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா. நீரஜ் சோப்ரா வாரத்தின் 6 நாட்கள் தினமும் 6 மணி நேரம் கடுமையாகப் பயிற்சி செய்து ஆசிய போட்டியில் தங்கம் என்ற தனது லட்சியக் கனவை நனவாக்கி உள்ளார்.

அடுத்து 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று மகத்தான சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் தொடக்க விழாவில் அணி வகுத்த இந்திய குழுவினருக்கு நீரஜ் சோப்ரா தேசியக் கொடி ஏந்தி தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.