இந்திய பேட்மிண்டன் பயிற்சி முறையிலுள்ள பிரச்னைகள் குறித்து தேசிய அணியின் பயிற்சியாளர் கோபி சந்த் மனம் திறந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றார். அத்துடன் பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பல பதக்கங்களை வென்றது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பேட்மிண்டன் விளையாட்டு மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் பயிற்சியில் உள்ள பிரச்னைகள் குறித்து தேசிய பயிற்சியாளர் கோபி சந்த் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டியளித்துள்ளார். அதில்,“உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதேபோல அவர்கள் சுதீர்மன் கோப்பை, தாமஸ் கோப்பை, உபர் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போன்ற தொடர்களிலும் சிறப்பாக செயல்படவேண்டும். அப்போது தான் பேட்மிண்டன் இன்னும் வளர முடியும்.
இந்தியாவை பொருத்தவரை நாம் மிகவும் கவனம் செலுத்தாதது இரட்டையர் பிரிவில்தான். ஏனென்றால் ஒற்றையர் பிரிவில் தற்போது ஒரு சில நல்ல வீரர்கள் உள்ளனர். ஆனால் இரட்டையர் பிரிவில் அது போன்ற வீரர்கள் தற்போது யாரும் இல்லை. அதேபோல சிந்து, சாய்னா தவிர அடுத்த அளவில் வீராங்கனைகள் யாரும் இதுவரை வளரவில்லை. ஆடவர் பிரிவிலும் ஸ்ரீகாந்த், பிரனாய், காஷ்யப் உள்ளிட்டோர் தவிர அடுத்த நிலையில் வேறு யாரும் இதுவரை புதிதாக வரவில்லை.
இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவில் நாம் அதிக கவனம் செலுத்தாதே இதற்கு முக்கிய காரணம். அந்த நிலைகளில் சரியான பயிற்சியாளர்கள் இல்லாததும் வீரர்கள் உருவாகாததற்கு ஒரு காரணமாகும். அத்துடன் தற்போது இருக்கும் பயிற்சியாளர் முறைகளில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். நமது விளையாட்டு மையமான எஸ்ஏஐ மற்றும் மத்திய அரசு பல வழிகளில் உதவிகள் அளித்தாலும் அவர்களுக்கு பேட்மிண்டன் பற்றி போதிய அறிவு இல்லை. இதன் காரணமாகவே அடுத்த கட்ட வீரர், வீராங்கனைகள் இந்தியாவில் உருவாகவில்லை.
பேட்மிண்டன் பயிற்சி முறைகளில் உள்ள குறைபாட்டை நான் பேசாமல் வேறு யாரு வந்து பேசுவார். ஆகவே தான் நான் தற்போது இதைப் பற்றி கூறியிருக்கிறேன். பேட்மிண்டன் பயிற்சியில் விரைவில் சீர்திருத்தம் செய்தால் அதற்கு ஏற்ப பணிப்புரிய நான் தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.