விளையாட்டு

ஜூடோ போட்டியில் சர்வதேச அளவில் தங்கப் பதக்கம்.. அசத்தும் ராசிபுரம் மாணவர்!

ஜூடோ போட்டியில் சர்வதேச அளவில் தங்கப் பதக்கம்.. அசத்தும் ராசிபுரம் மாணவர்!

Sinekadhara

ராசிபுரம் அருகே ஜூடோ போட்டியில் சர்வதேச அளவில் தங்கப் பதக்கம் வென்ற கிராமத்து மாணவனுக்கு ஆசிய போட்டியில் விளையாட தமிழக அரசு உதவிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தொ.ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மாரீஸ்வரன் தனியார் கல்லூரியில் BA மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மாரீஸ்வரனுக்கு பள்ளியிலிருந்தே ஜூடோ மேல் ஆர்வம் இருந்ததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கற்று வருகிறார். பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் சென்று அங்கும் விளையாடி பதக்கம் பெற்றுள்ளார்.

இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி நேபாளத்தில் சர்வதேச அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவிற்காக தமிழகத்தைச் சேர்ந்த மாரீஸ்வரன் கலந்து கொண்டு விளையாடினார். இதில் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அவர் வெற்றிபெற்றதை அடுத்து மாரீஸ்வரன் தந்தை, உறவினர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.

இதுகுறித்து மாரீஸ்வரன் கூறுகையில் வருகிற இரண்டு மாதங்களில் நடைபெற இருக்கும் தென் ஆசிய அளவிலான ஜூடோ போட்டி தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பேன் என கூறினார். மேலும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு அதிக பணம் செலவாவதால் தமிழக அரசு உதவிசெய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.