விளையாட்டு

“8 வயதில் ஆசிரமம்.. இன்றோ கையில் தங்கப் பதக்கம்”.. சாதித்து காட்டிய மாற்றுத் திறனாளி வீரர்..!

“8 வயதில் ஆசிரமம்.. இன்றோ கையில் தங்கப் பதக்கம்”.. சாதித்து காட்டிய மாற்றுத் திறனாளி வீரர்..!

webteam

குப்பையில் இருந்து கூட மல்லிகை வளரும். வீசும் காற்றில் அதன் வாசம் தெருவோரம் செல்வோரை எல்லாம் இழுக்கும். ஆம். மல்லிகை வளர குப்பை மண் என்றெல்லாம் இல்லை. அது வளர நினைத்தால் வளரும் அவ்வளவுதான். அதுபோலத் தான் திறமை இருப்பவர்களை போற்றிப்பாட வேண்டியதில்லை. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும், அவர்கள் அவ்வளவு எளிதில் துவண்டு விட மாட்டார்கள். ஒருநாள் தாங்கள் பட்ட வேதனைகள் அனைத்தையும் சாதனைகளாக்கி  ஒரு கட்டத்தில் மணக்க ஆரம்பிப்பார்கள். அதுவரை அருகில் இருந்தவர்கள் கூட அவர்களை கவனிக்காத நிலையில் வெற்றிக்கு பின் அவர்களை ஊரே தலையில் வைத்து கொண்டாடும்.

ஆம் அப்படிப்பட்ட சாதனையைத் தான் நிகழ்த்தியிருக்கிறார் மாற்றுத் திறனாளி வீரரான நாராயன் தாகூர். 8 வயதில் அனாதை ஆசிரமத்திற்கு அனுப்பப்பட்ட அவரை தற்போது நாடே திரும்பி பார்க்கிறது. ஜகர்தாவில் நடைபெற்ற ஆசியக் கோப்பை பாரா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார் நாராயன் தாகூர். 100 மீ தடகளப் போட்டியில் இந்தியாவிற்கு இன்று தங்கம் வென்றவர் அன்று ஒருவேளை சாப்பிட்டிற்கே உணவு இல்லாமல் தவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “பிறக்கும்போதே உடல் குறைபாடுடன் தான் பிறந்தேன். பக்கவாதம் காரணமாக எனது இடதுபக்கம் செயலிழக்காமல் போனது. பீகாரில் பிறந்திருந்தாலும் அப்பாவின் உடல்நிலை காரணமாக டெல்லிக்கு இடம்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மூளைக்கட்டி காரணமாக என் அப்பாவும் என்னுடைய 8 வயதில் உயிரிழந்துவிட்டார். அதன்பின் வாழ்க்கையை போர்க்களம்தான். அப்பாவின் மறைவிற்கு பின் அம்மா அங்கிருந்த சிறிய பிளாஸ்டிக் பேக்டரியில் வேலை பார்த்தார். ஆனால் அவரின் வருமானம் மூன்று குழந்தைகளுக்கும் போதுமானதாக இல்லை. இதனால் என்னுடைய 8 வயதில் நான் அனாதை ஆசிரமத்திற்கு அனுப்பப்பட்டேன். அங்கு எனக்கு உணவுடன் படிக்கவும் முடிந்தது. எனக்கு கிரிக்கெட் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். அந்த விளையாட்டில் தீராத ஆர்வமும் இருந்தது. ஆனால் அந்த விளையாட்டை தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. ஆசிரமத்தை விட்டு வெளியே வந்ததும் தினசரி உணவுக்காக ரொம்பவும் கஷ்டப்பட்டேன். வயிற்றை நிறைக்க எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தேன். பஸ்ஸை சுத்தம் செய்தல், தெருவோரக் கடைகளில் வெயிட்டர் வேலை என அனைத்தையும் பார்த்தேன். ஆனாலும் எனக்குள் விளையாட்டின் மீது தீராத ஆர்வம் இருந்தது.

பின்னர் எப்படியோ நேரு அரங்கத்தில் தடகள பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நேரு அரங்கத்திற்கு சென்றுவர ஒருநாளைக்கு பஸ் கட்டணமே ரூபாய் 40 முதல் 50 ஆகும். அப்படியிருக்க எப்படி என்னால் அதனை தொடர முடியும். பின்னர் ஒருவழியாக தியாகராஜ் அரங்கில் தடகள பயிற்சி மேற்கொண்டேன். கடுமையான முயற்சி காரணமாக இந்தியாவிற்கு பதக்கம் வென்றுள்ளேன். அதனால் உண்மையிலேயே நான் மகிழ்ச்சியில் இருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி மூலம் 40 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. டெல்லி அரசாங்கம் மூலம் இன்னும் கூடுதல் நிதியுதவி கிடைக்கும்  என நம்புகிறேன்” என தெரிவித்தார். பணத்தை வைத்து என்ன செய்வீர்கள் எனக் கேட்டபோது, “ முதலில் எங்களுக்கு ஒரு வீடு வேண்டும். அதனை கட்டுவேன். பின்னர் மீதமிருக்கும் பணத்தை எனது பயிற்சிக்காக பயன்படுத்திக் கொள்வேன்” என கூறினார்.

Courtesy: TheTimesofIndia