விளையாட்டு

"தோனி கிரிக்கெட்டின் அடுத்தக் கட்டத்துக்கு தயாராகிறார்" பிராட் ஹாக் கணிப்பு

"தோனி கிரிக்கெட்டின் அடுத்தக் கட்டத்துக்கு தயாராகிறார்" பிராட் ஹாக் கணிப்பு

jagadeesh

தோனிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓர் அதிரடி சுற்று காத்திருப்பதாகவே நினைக்கிறேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

38 வயதான மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பிறகு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால், அவர் அடுத்ததாக எந்தப் போட்டியில் விளையாடப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளிலாவது அவர் விளையாடுவார் என்று பார்த்தால் அதுவும் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தோனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஆகியோர், தோனி மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்றே கருத்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறும்போது "எனக்கு தெரிந்து இப்போதைக்கு தோனி தன்னுடைய ஓய்வு குறித்து அறிவிக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். அவர் இப்போது நிம்மதியாக அமைதியாக தன்னுடைய வேலையை பார்த்து வருகிறார். அவரின் செயல்களை பார்த்தால் தோனி தன் அடுத்தக்கட்ட கிரிக்கெட்டுக்கு தயாராவதாகவே எனக்கு தோன்றுகிறது. தோனி விளையாடிய கிரிக்கெட் அலாதியானது, அதனை நாம் மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்."

மேலும் தொடர்ந்த பிராட் ஹாக் "எனக்கு தெரிந்து அவருக்கு கிரிக்கெட் வாழ்க்கை இன்னமும் மிச்சமிருக்கிறது. இந்தியாவுக்காக அடுத்த இரண்டு ஆண்டுகள் விளையாடுவார், அப்போது மீண்டும் ஒரு சுற்று வலம் வருவார் தோனி" என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.