தோனியை தன்னுடைய கடவுள்போல நினைக்கிறார் ரிஷப் பன்ட் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் நிதீஷ் ராணா தெரிவித்துள்ளார்.
இந்தியா டிவியில் பேசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிதீஷ் ராணா "தோனியை மிகவும் வியந்து பார்ப்பார் ரிஷப் பன்ட். அவர் தூங்கி கண் விழிக்குப்போது பார்க்கும் நபராக தோனி இருக்க வேண்டும் என விரும்புவார். இது குறித்து என்னிடமே பல முறை கூறியிருக்கிறார். மேலும் தோனியுடன் தன்னை ஒப்பிடுவது சரியல்ல என்றும், தான் அதற்கு தகுதியானவர் இல்லை எனவும் பலமுறை கூறியிருக்கிறார். இந்த ஒப்பீட்டை நிறுத்த வேண்டும் என்றும் தோனி தனக்கு கடவுள் போன்றவர் எனவும் சொல்லியிருக்கிறார்" என்றார்.
மேலும் பேசிய நீதிஷ் ராணா "ரிஷப் பன்ட்டின் மிகப்பெரிய பலம் அவருடைய தன்னம்பிக்கை. எந்த பார்மெட்டில் விளையாடினாலும் அவருடைய ஆட்டத்தை அவர் கைவிடுவதில்லை. அவர் மீது விமர்சனம் எழுந்தபோது மிகவும் பொறுமை காத்தார். மேலும் இந்தியாவின் வெற்றிக்காக ஒரு இன்னிங்ஸ் விளையாடுவேன், அது என் வாழ்க்கையை மாற்றும் என திடமாக நம்பினார். அதனை 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்திலேயே ரிஷப் பன்ட் செய்து காட்டிவிட்டார். அதுதான் ரிஷப் பன்ட்டின் பலம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் "அந்த சதத்துக்கு பின்பு என்னிடம் பேசிய பன்ட், சில மீம்களை என்னிடம் காட்டினார். அந்த மீம்கள் அனைத்தும் ரிஷப் பன்ட்டை பாராட்டும் வகையில் இருந்தது. நன்றாக விளையாடி சாதித்தால் மக்களின் மன நிலை ஒரேநாளில் மாறிவிடும் எனக் கூறினார்" என்றார் நிதீஷ் ராணா.