மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் குண்டன் டி காக் அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரி உட்பட 81 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரோகித் சர்மா 32 பந்தில் 47 ரன் அடித்தார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா 11 பந்தில் 3 சிக்ஸர் உட்பட 28 ரன்கள் விளாசினார். ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
188 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு, ரகானே, ஜோஸ் பட்லர் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ரகானே 37(21) ரன்னில் ஆட்டமிழந்தார். பட்லர் அதிரடியில் மிரட்ட, அவருக்கு சஞ்சு சாம்சன் ஒத்துழைப்பு அளித்தார். பட்லர் 43 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகள் உட்பட 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பட்லர் ஆட்டமிழந்த போது ராஜஸ்தான் அணி 13.2 ஓவரில் 174 ரன்கள் எடுத்திருந்தது. மீதமுள்ள 40 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. கைவசம் 8 விக்கெட் இருந்தது.
ஆனால், ராஜஸ்தான் அணியில் சாம்சன் 31(26), ஸ்மித் 12(15), திரிபாதி 1(2), லிவிங்ஸ்டன் 1(2) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், கடைசி நேரத்தில் ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி உருவானது. அதனால், எளிதில் முடியவேண்டிய போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. நேரத்தில் கோபல் பவுண்டரி அடித்து ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தார். அந்த அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். அதேபோல், 7வது போட்டியில் விளையாடிய மும்பை அணிக்கு இது மூன்றாவது தோல்வியாகும்.