விளையாட்டு

3-வது டெஸ்ட்: மார்க் வுட் வேகத்தில் சரிந்தது வெஸ்ட் இண்டீஸ்!

3-வது டெஸ்ட்: மார்க் வுட் வேகத்தில் சரிந்தது வெஸ்ட் இண்டீஸ்!

webteam

இங்கிலாந்து பந்துவீச்சாளர் மார்க் வுட்டின் வேகத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையி லான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 2-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றிவிட்டது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்து வருகிறது. 

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பர்ன்ஸ் 29 ரன்னிலும் ஜென்னிங்ஸ் 8 ரன்னிலும் வெளியேற, அடுத்து வந்த டென்லி 20 ரன்னிலும் கேப்டன் ஜோ ரூட் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி தடுமாறியது. பின்னர் வந்த ஜாஸ் பட்லரும் பென் ஸ்டோக்ஸும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் பொறுமையாக ஆடி, அரைசதம் அடித்தனர்.

 முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்திருந்தது. பட்லர் 67 ரன்னுடனும் பென் ஸ்டோக்ஸ் 62 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 2 வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 277 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பட்லர் 67 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 79 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.  வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 4 விக்கெட்டுகளும் கேப்ரியல், ஜோசப், கீமோ பால் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 47.2 ஓவர்களில் 154 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஜான் கேம்பல் 41 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட் 5 விக்கெட்டுகளை அள்ளினார். மொயின் அலி 4 விக்கெட்டும் பிராட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆடி வருகிறது. இதன் மூலம் இங்கிலாந்து அணி, 142 ரன் முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.