விளையாட்டு

”விடிய விடிய ஃபுட்பால் பார்த்தேன்; இப்படியாகும்னு நினைக்கல” Facial Palsyயால் பாதித்த சீனர்

”விடிய விடிய ஃபுட்பால் பார்த்தேன்; இப்படியாகும்னு நினைக்கல” Facial Palsyயால் பாதித்த சீனர்

JananiGovindhan

விளையாட்டு ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக கத்தார் நாட்டில் கடந்த நவம்பர் 20ம் தேதியில் இருந்து தொடங்கி களைகட்டி வருகிறது 2022ம் ஆண்டுக்கான FIFA கால்பந்து உலகக்கோப்பை போட்டி.

ஆசியாவின் இந்தியா, சீனா உட்பட பல நாடுகளிலும் கால்பந்து போட்டிகளுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதன்படி, நடப்பு கால்பந்து உலகக்கோப்பை போட்டியை ஒவ்வொரு நாளும் ஃபுட்பால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு பார்த்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில் சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விடிய விடிய கால்பந்து போட்டிகளை பார்த்து வந்திருக்கிறார். இதனால் ஒவ்வொரு நாளும் தோராயமாக வெறும் இரண்டு மணிநேரம் மட்டுமே தூங்கியதால் அவரது முகம் முடங்கியே போயிருக்கிறது.

இது தொடர்பான CN Hubei-ன் செய்திக்கூற்றுப்படி, சாவோ என்ற இளைஞர் ஒருநாள் கூட ஃபிஃபா ஃபுட்பால் போட்டிகளை தவறவிட்டதில்லையாம். இது போக வேலைக்கு பைக்கில் செல்ல வேண்டும் என்பதற்காக 2 மணிநேரம் தூங்கி எழுவாராம்.

“நவம்பர் 30ம் தேதி ஃபிஃபா கால்பந்து போட்டி தொடங்கியதில் இருந்தே வெறும் 2 மணிநேரம்தான் தூங்குவேன். தூங்கி எழுந்த பிறகு ரொம்பவே சோர்வாகத்தான் இருக்கும். அது சரியா தூங்காததுனாலதான் அப்படி இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன். ஆனால் ஒரு நாள் ஆஃபிஸ் சென்ற போது என்னுடைய உதடு ஒரு பக்கமாக சாய்ந்தபடியும், கண்களை திறக்க முடியாமல் போனதை கவனித்தேன்” என்று முகம் முடங்கிப்போன அந்த இளைஞர் சாவோ கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஆஃபிஸிலேயே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தேன். ஆனால் தூங்கி எழுந்தும் எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை. அதேச்சமயம் கொஞ்ச நேரத்தில் என்னுடைய உடல்நிலையில் மாற்றம் வந்ததை உணர்ந்தேன்.” என தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் முகத்தில் முடக்குவாதம் (Facial palsy) வந்திருப்பது கண்டறியப்பட்டது. டெஸ்ட் முடிவு படி முறையாக தூங்காததாலும், குளிர்ச்சியான காற்று சேர்ந்ததாலும் சாவோவின் முகம் முடங்கிப் போகும் அளவுக்கு மாறியிருக்கிறது. இதனால் சாவோவிற்கு தன் முகத்தின் ஒரு பக்கத்தில் எந்த செயல்பாடும் இல்லாமலே போயிருக்கிறதாம்.

அதன் பின்னர், அக்யூபஞ்சர் மற்றும் ஃபேஷியல் மசாஜ் ஆகிய சிகிச்சைகள் சாவோவிற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்ததன் பேரில் அதனை மேற்கொண்டதால் தற்போது அந்த இளைஞர் குணமாகியிருக்கிறாராம்.