விளையாட்டு

திருமணத்திற்கு முக்கியம் காதல் தான்; நாடு இல்லை - சானியாவின் கணவர் சோயப் மாலிக் கருத்து!

திருமணத்திற்கு முக்கியம் காதல் தான்; நாடு இல்லை - சானியாவின் கணவர் சோயப் மாலிக் கருத்து!

webteam

திருமணத்திற்கு அன்பும், காதலுமே முக்கியம்; நாடு இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். விளையாட்டுத்துறையில் புகழ்பெற்ற ஜோடியாக கருதப்படும் மாலிக் - சானியா ஜோடி 12 வருட திருமண வாழ்க்கையை கடந்துவிட்டனர். ஆனாலும் அவரவர்களின் நாடுகளால் இன்னமும் சில விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

இந்நிலையில் இத்தனை வருடங்களுக்கு பிறகு தங்களின் திருமணம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் பேசியுள்ளார். ஒருவரை திருமணம் செய்ய முக்கியமானது அன்பும், காதலுமாகவே இருக்கிறது என்றும் நாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், திருமணத்தை பொருத்தவரை நமக்கானவர் எங்கிருந்து வருகிறார். எந்த நாட்டைச் சேர்ந்தவர், நாடுகளுக்கு இடையேயுள்ள அரசியல் என்பதெல்லாம் தேவையில்லை. அது நமக்கான களம் அல்ல.

நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்றால் திருமணம் செய்ய வேண்டும் என்பது தான் முக்கியம். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. மேலும், எனக்கு இந்தியாவில் நிறைய நண்பர்கள் உண்டு. இரு நாடுகளுக்கு இடையேயான உறவால் எனக்கு எந்தவித சிரமமும் இல்லை. நான் ஒரு கிரிக்கெட் வீரர். அரசியல்வாதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்

கொரோனா ஊரடங்கிற்கு முன்பு மாலிக் பாகிஸ்தானிலும், சானியா மிர்சா இந்தியாவிலும் சிக்கிக் கொண்டனர். கடந்த 5 மாதங்களாக குடும்பத்தினரை பிரிந்திருந்த மாலிக், விமான போக்குவரத்து தொடங்கியதும் தன் மனைவி சானியாவையும், மகனையும் இங்கிலாந்தில் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.