விளையாட்டு

99 ரன்னில் க்ளீன் போல்ட்... விரக்தியில் பேட்டை விசிறி எறிந்த கெயில்!

99 ரன்னில் க்ளீன் போல்ட்... விரக்தியில் பேட்டை விசிறி எறிந்த கெயில்!

webteam

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில் 99 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 50 ஆவது லீக் போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், தொடக்க வீரர் மந்தீப் சிங் முதல் பந்திலே ஆட்டமிழக்க, அடுத்ததாக களத்திற்கு வந்தார் கிறிஸ் கெயில். மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்து முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், விரைவிலேயே அவர் அதிரடி ஆட்டத்திற்கு மாறினார். சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசி தள்ளினார். பந்துகளை எல்லைக்கோட்டிற்கு வெளியே அடித்துக் கொண்டே இருந்தார். ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்த போதும் கெயில் இறுதிவரை தனது அதிரடியை தொடர்ந்தார்.

19வது ஓவர் முடிவில் அவர் 92 ரன்கள் எடுத்திருந்தார். அதனால் நிச்சயம் கடைசி ஓவர் அவர் சிக்ஸர்கள் விளாசி சதத்தை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதுவும் 20வது ஓவரில் முதல் ஸ்டிரைக்கை அவர் தான் எதிர்கொண்டார். டி20 தொடரின் ஆகச்சிறந்த பந்துவீச்சாளரான ஆர்ச்சர் அந்த ஓவரை வீசினார். முதல் பந்திலே கெயில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அதனால், சற்றே ஏமாற்றம் அடைந்தார். பின்னர், மறுமுனையில் விளையாடிய மேக்ஸ்வெல் ஒரு சிங்கிள் எடுத்துக் கொடுத்தார். இன்னும் 4 பந்துகள் மட்டுமே இருந்த நிலையில் அவர் சதத்திற்கு 7 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

3வது பந்தில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் கெயில். இப்போது அவர் 99 ரன்களில் இருந்தார். இன்னும் ஒரு ரன் தானே என்பதால் எளிதில் சதம் அடித்துவிடுவார் என்றே தோன்றியது. ஆனால், ஆர்ச்சரின் நேர்த்தியான யார்க்கர் பந்துவீச்சில் அவர் க்ளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். ஒரு ரன்னில் சதத்தை நழுவ விட்டதால் விரக்தி அடைந்த கெயில் தன்னுடைய பேட்டை மைதானத்திலேயே விசிறி எறிந்தார். அது சற்று தூரம் சென்று விழுந்தது. இருப்பினும் யார் மீதும் படவில்லை.

என்னதான் டென்சன் ஆக இருந்தாலும் அடுத்த நொடியே அவரது நல்ல குணத்தை காட்டிவிட்டார். தன்னுடைய விக்கெட்டை சாய்த்த ஆர்ச்சருக்கு கை கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். அவர் முகம் முழுவதும் ஏமாற்றம். அதேபோல் கெயில் சதம் விளாசுவார் என எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த வருத்தமே. பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. 63 பந்துகளில் 99 ரன்கள் குவித்த கெயில் 8 சிக்ஸர்களையும், 6 பவுண்டரிகளையும் விளாசி இருந்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள கெயில் இதுவரை 276 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை மூன்று அரைசதம் அடித்துள்ளார். கெயில் வந்த பிறகே பஞ்சாப் அணி உத்வேகம் அடைந்து வெற்றி மேல் வெற்றி குவித்து வருகிறது. அவர் வந்த பிறகு 5 போட்டிகளிலுமே பஞ்சாப் வெற்றி வாகை சூடியுள்ளது.