இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடரை வெல்லும் அணி எது என்பதை முடிவு செய்யும் இந்த போட்டி ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரென்ஷா விரைவில் வெளியேறினாலும், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி ஜேர்ந்த கேப்டன் ஸ்மித், வார்னர் இணை, சிறப்பாக ஆடி ரன் குவித்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 134 ரன்கள் குவித்த நிலையில், 54 ரன்கள் எடுத்திருந்த வார்னர் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய அணியின் அறிமுக வீரர் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இதனால், ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் என்ற நிலைக்கு பின்தங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவன் ஸ்மித், தொடரின் 3ஆவது சதத்தினைப் பதிவு செய்தார். அவர் 111 ரன்களில் ஆட்டமிழந்தார். ஏழாவது விக்கெட்டுக்குக் களமிறங்கிய மேத்யூ வேட் அரைசதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களை எட்டியது. 88.3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேத்யூ வேட் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு ஓவர் மட்டுமே பேட்டிங் செய்த இந்திய அணி ரன் கணக்கைத் தொடங்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களான லோகேஷ் ராகுல் மற்றும் முரளிவிஜய் ஆகியோர் களத்தில் உள்ளனர்.