விளையாட்டு

கோலி, ரோகித்துக்கு அவகாசம் தரவேண்டும் - ஆதரவாக அட்வைஸ் கொடுத்த அஸ்வின்!

கோலி, ரோகித்துக்கு அவகாசம் தரவேண்டும் - ஆதரவாக அட்வைஸ் கொடுத்த அஸ்வின்!

webteam

இந்திய அணி வீரர்களான கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு சகவீரரான அஸ்வின் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

இந்திய ஆடவர் அணி, ஐசிசி கோப்பைகளை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாக, 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான வீரர்கள் வென்றிருந்தனர். அதன்பிறகு, ஐசிசி சார்ந்த எந்தக் கோப்பைகளையும் இந்திய அணி வெல்லாததால் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையும் டி20 உலகக்கோப்பையை கடந்த ஆண்டு இழந்ததையடுத்து, தற்போது அந்த அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக உள்ளார். இதனாலேயே இந்திய அணியின் மீதும் கேப்டன்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பதிலளித்த தமிழக வீரர் ஆர்.அஸ்வின், “இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரே ஐந்து உலகக் கோப்பைகளில் (1992, 1996, 1999, 2003, 2007) பங்கேற்றபோதும், அவர் எந்த வெற்றியையும் பெறவில்லை. அதாவது, கோப்பையைக் கைப்பற்றவில்லை. 2011ல் தான் அவரால் உலகக்கோப்பையை வெல்ல முடிந்தது. இதை வெல்வதற்கு அவருக்கு, 6 உலகக் கோப்பை தொடர்கள் தேவைப்பட்டது.

அதுபோல் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பையை தன்னுடைய முதல் வாய்ப்பிலேயே வென்றுவிட்டார் என்பதற்காக, அது அனைவருக்குமே நடந்துவிடும் என்பதில்லை. கோலி, ரோகித் சர்மா ஐசிசி தொடரை வெல்லவில்லை என்கிறார்கள். ஆனால், அவர்கள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இடம்பெற்றிருக்கிறார்கள். ஐபிஎல் மட்டுமல்லாமல் பல்வேறு தொடர்களிலும் விளையாடியிருக்கிறார்கள். ஆகையால், அவர்களுக்கு அவகாசம் கொடுக்கவேண்டும்" எனத் தெரிவித்தார்.