விளையாட்டு

சொதப்பிய கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்.. மும்பைக்கு 134 ரன்கள் இலக்கு..!

சொதப்பிய கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்.. மும்பைக்கு 134 ரன்கள் இலக்கு..!

webteam

மும்பைக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி  133 ரன்கள் குவித்துள்ளது. 

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லின் மற்றும் கில் களமிறங்கினர். 

இவர்கள் இருவரும் தொடக்கத்தில் சற்று தடுமாறினார்கள். கில் 16 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார். எனினும் லின் தனது அதிரடி ஆட்டத்தை தொடர ஆரம்பித்தார். இவர் 29 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 41 ரன்கள் விளாசினார். லின் 41 ரன்களில் பாண்ட்யா பந்துவீச்சில் அவுட் ஆனார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் வெறும் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதேபோல அதிரடி நாயகன் ரஸலும் வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் கொல்கத்தா அணி 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்தது. 

அதன்பின்னர் வந்த நிதிஷ் ரானா, உத்தப்பாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 13 பந்தில் 3 சிக்சர் உதவியுடன் 26 ரன்கள் எடுத்து மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் உத்தப்பா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். இவர் 3 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியின் உதவியுடன் 40 ரன்களில் 20-வது ஓவரில் அவுட் ஆனார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மலிங்கா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அத்துடன் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட் எடுத்தனர்.