இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கான்பூரில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இரு அணிகளிலும் மாற்றம் இல்லை.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்தும், புனேயில் நடந்த 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டிகான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
தொடர்ச்சியாக 6 ஒரு நாள் தொடர்களை வசப்படுத்தியுள்ள இந்திய அணி, இந்த தொடரையும் கைப்பற்றும் நோக்கத்தில் களமிறங்குகிறது. இதில் வெற்றி பெற்று இந்திய மண்ணில் முதல்முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றும் நோக்கில் நியூசிலாந்து அணி தீவிரமாக களமிறங்குகிறது.
கடந்த போட்டியில் ஷிகர் தவானும், தினேஷ் கார்த்திக்கும் அணியின் வெற்றிக்கு உதவினர். இந்தப் போட்டியிலும் அவர்கள் சாதிப்பார்கள் என்று தெரிகிறது. துணை கேப்டன் ரோகித் இந்தப் போட்டியிலாவது நிலைத்து நின்று ரன்கள் குவித்தால் இந்திய அணியின் வெற்றி நிச்சயம். இந்திய அணியின் பந்துவீச்சும் பலமாக இருக்கிறது. அதே நேரத்தில் நியூசிலாந்தின் மிடில் ஆர்டர் வலுவாக உள்ளது. லாதம், ராஸ் டெய்லர் இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பந்துவீச்சிலும் அந்த அணி அபாரமாக செயல்படுவதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.