விளையாட்டு

ஐபிஎல் 2021: சொந்த மைதானத்தை "மிஸ்" செய்யும் அணிகள்!

ஐபிஎல் 2021: சொந்த மைதானத்தை "மிஸ்" செய்யும் அணிகள்!

jagadeesh

இந்தியாவில் இரண்டு மாதங்களாக நடைபெறவிருக்கும் ஐபிஎல் திருவிழாவுக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி பெரும்பாலும் ஏப்ரல், மே மாதங்களில் எவ்வித கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்பதில்லை. ஆனால், கோடைத் திருவிழா போன்று கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் ப்ரீமியர் கிரிக்கெட் லீக் எனப்படும், ஐபிஎல் தொடர், இந்திய ரசிகர்கள் மட்டுமன்றி, உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில், இந்த ஆண்டின் முதல் போட்டி சென்னையில் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்குகிறது. முதற்கட்ட போட்டிகள் அனைத்தும் சென்னை மற்றும் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி சென்னை, மும்பையில் தலா 10 போட்டிகள் நடைபெற உள்ளன.

கொரோனா காலத்தில் நடைபெறும் இந்த ஐ.பி.எல் தொடர் வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி ஆகிய 6 மைதானங்களில் போட்டிகள் நடத்த திட்டமிடபட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் 4 மைதானங்களில் போட்டிகளில் பங்கேற்கும், சொந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு எந்த அணிக்கும் இல்லை. அந்த வகையில் சென்னை சேப்பாகத்தில் நடைபெறும் போட்டிகளில் மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கின்றன.

இங்கிலாந்து தொடரில், இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் நேராக தங்களது ஐபிஎல் அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. அதே நேரம் மற்ற வீரர்கள் அனைவரும் 1 வார காலம் தனிமைப்படுத்தப்பட்டு, மூன்று முறை பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் நெகட்டிவ் என வந்த பின் அணியினருடன் இணையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9ம் தேதி நடைபெறும் சென்னையில் நடைபெறும் போட்டியில் மும்பை, பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணியில் இடம்பிடித்திருந்த மும்பை வீரர்கள் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் நேரடியாக மும்பை அணியுடன் இணைந்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தை சேர்ந்த சிலர் சென்னை வந்துவிட்ட நிலையில், விரைவில் வீரர்களும் வர இருக்கின்றனர்.

முகமத் சிராஜ், சஹல் பெங்களூரு அணியுடன் இணைந்துள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அணியுடன் இணையவில்லை. ஏப்ரல் 1ம் தேதி சென்னை வரும் கோலி ஒரு வாரம் தனிமைப்படுத்தபடுவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 4 அணிகளுமே இன்னும் ஓரிரு நாளில் முழுமையாக சென்னை வந்து சேர்ந்துவிடுவர்கள் எனத் தெரிகிறது.

4 அணி வீரர்களும் ஒரே நேரத்தில் சென்னையில் தங்கி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதால், அதற்கு தேவையான திட்டமிடல்களும் மேற்கொள்ளபட்டுள்ளன. நான்கு அணி வீரர்களும் தனித்தனியே நட்சத்திர விடுதிகளில் தங்கவைக்கப்படுகின்றனர். அனைவரும் சேப்பாக்கம் வந்து பயிற்சி மேற்கொள்வது சிரமம் என்பதால், எஸ்.எஸ்.என் கல்லூரி, போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆகிய மைதானங்களிலும் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி வரை, வேறு இடங்களில் தனித்தனியாக பயிற்சி மேற்கொள்ளும் அணிகள் ஏப்ரல் 7ம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதற்கட்ட போட்டிகளில் ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் நடைபெறும் 10 போட்டிகளிலுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.