விளையாட்டு

‘சீனியர்னாலும் சிங்கம்னு நிரூபித்த சிஎஸ்கே’ - கோப்பையை வென்று அசத்தல்

‘சீனியர்னாலும் சிங்கம்னு நிரூபித்த சிஎஸ்கே’ - கோப்பையை வென்று அசத்தல்

webteam

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் வாட்சனின் அதிரடி சதத்துடன், கோப்பையை வென்றது சென்னை அணி.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணியிடம் வலுவான பந்துவீச்சு இருந்ததால், 179 கடினமான இலக்காக கருத்தப்பட்டது. அந்த அணியில் கேப்டன் வில்லியம்சன் 47 (36), யூசுப் பதான் 45 (25), தவான் 26(25), சாகிப் உல் ஹாசன் 23 (15) ரன்கள் எடுத்தனர்.

தவான் முந்தைய போட்டிகளில் சரியாக விளையாட வில்லை என்றாலும், இறுதிப்போட்டியில் பொறுப்பாகவும், அதிரடியாகவும் விளையாடி அசத்தினார். அவரின் அதிரடியால் தான் ஐதராபாத் 178 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் ஷர்தூல் தாகூர் மற்றும் ப்ராவோ தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்சன் மற்றும் டு பிளசிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்த நிலையில் டு பிளசிஸ் ஆட்டமிழந்தார். பின்னர் ரெய்னா மற்றும் வாட்சன் கூட்டணி அமைத்து விளையாடினார்கள். 16 பந்துகளை கடந்த பின்னர் வாட்சன் தனது அதிரடியை தொடங்கினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 33 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

பின்னர் ஒரு ஓவரில் 27 ரன்கள் குவித்து ரசிகர்கள் ஆட்டம் போட வைத்தார். ஒரு புறம் ரெய்னா சராசரி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் வாட்சன் அதிரடி ரன்களை அள்ளிக்குவித்தது. அதிரடி ஆட்டம் தொடர, 51 பந்துகளில் வாட்சன் சதம் அடித்தார். அரங்கமே அதிர்ந்தது. ராயுடு தொடக்கத்தில் ரன்கள் எடுக்காமல் இருக்க, அவரும் பின்னர் ரன்களை சேர்க்க தொடங்கினார். வாட்சனின் அதிரடியால் 179 என்ற இலக்கை சென்னை அணி 18.3 ஓவர்களில் எட்டியது. சென்னை அணி கோப்பையை வென்றது. ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.