விளையாட்டு

கொல்கத்தா அணியில் இணைந்த 3வது தமிழக வீரர் - ஜெகதீசனை நழுவவிட்டதா சிஎஸ்கே?

கொல்கத்தா அணியில் இணைந்த 3வது தமிழக வீரர் - ஜெகதீசனை நழுவவிட்டதா சிஎஸ்கே?

சங்கீதா

வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஏற்கனவே உள்ளநிலையில், தற்போது நடைபெற்று வரும் மினி ஏலத்தில் தமிழக வீரர் ஜெகதீசனை ஏலத்தில் எடுத்துள்ளது கொல்கத்தா அணி.

16-வது சீசன் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, 10 அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான பேட்டிங், பௌலிங், ஆல் ரவுண்டர் ஆகியவற்றில் சாதிக்கும் வீரர்களை எடுத்து வருகிறது. சென்னை அணியில் பிராவோ இல்லாத நிலையில், ஆல் ரவுண்டரை தேர்ந்தெடுக்கும் வகையில், சாம் கரணை முயன்று கடைசியில் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது அந்த அணி. இதேபோல், கேப்டன் கேன் வில்லியம்சனை வெளியேற்றிய நிலையில் சன் ரைசர்ஸ் அணி அதற்கேற்றாவறு மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்நிலையில், சென்னை அணியிலிருந்து ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்ட தமிழக வீரர் ஜெகதீசனை, கொல்கத்தா அணி 90 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அவரது அடிப்படை விலை 20 லட்சமாக இருந்த நிலையில், சென்னை அணி மீண்டும் ஜெகதீசனை எடுக்க முனைப்புக் காட்டியது. ஆனால், கொல்கத்தா அணியும் விடாப்பிடியாக இருந்தது. கடைசியாக ரூ. 90 லட்சத்திற்கு கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

கடந்த மாதம் நடந்த விஜய் ஹசாரே கோப்பை 50 ஓவர் தொடரில், தொடர்ந்து 5 சதங்கள் விளாசி, புதிய சாதனையை தமிழக வீரர் நாரயண் ஜெகதீசன் செய்திருந்தார். மேலும் அந்தத் தொடரில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5-வது சதத்தை பூர்த்திச் செய்ததுடன், 114 பந்துகளில் தனது இரட்டை சதத்தைக் கடந்து மற்றொரு வரலாற்று சாதனையையும் ஜெகதீசன் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியில் இருந்து ஜெகதீசன் விடுவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது என்னவெனில், 50 ஓவர் போட்டிகளில் சாதிக்கும் ஜெகதீசன், 20 ஓவர் போட்டிகளில் சரிவர விளையாடவில்லை என விமர்சனம் எழுந்தது. கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்ரவர்த்தி சாதித்து, இந்திய அணியில் இடம் பிடித்த நிலையில், வலது கை பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ஜெகதீசனும், எதிர்வரும் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.