'நம்பிக்கையுடன் இருங்கள். அணி நிர்வாகம் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்' என்று மும்பை இந்தியன்ஸ் வீரர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் நீட்டா அம்பானி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேவில் நேற்று முன்தினம் நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை அணி, இம்முறை தொடர்ச்சியாக 4வது தோல்வியை பெற்றது. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை ஊக்கமளிக்கும் வகையில் அந்த அணியின் உரிமையாளர் நீட்டா அம்பானி ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் நீட்டா அம்பானி அனுப்பிய ஆடியே மெசேஜை வீரர்கள் அனைவரும் கேட்கின்றனர். அதில் நீட்டா அம்பானி கூறுகையில், ''எனக்கு உங்கள் அனைவரின் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. நாம் வெற்றி பெறுவோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இனி நாம் உயரப்போகிறோம். இதை நாம் ஜெயிக்கப் போகிறோம் என்பதை நாம் நம்ப வேண்டும். நாம் இதற்கு முன்பு பலமுறை இந்த நிலையில் இருந்திருக்கிறோம். பின்னர் முன்னேறி கோப்பையை வென்றுள்ளோம். நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் நிச்சயம் நாம் கோப்பையை வெல்ல முடியும்.
நான் உங்களை மீண்டும் சந்திப்பேன். அதுவரை, நீங்கள் எதை விரும்பினாலும் உங்கள் அனைவருக்கும் எனது முழு ஆதரவு உண்டு. தயவு செய்து ஒருவரை ஒருவர் நம்புங்கள், உங்கள் மீது நம்பிக்கை வைத்துக்கொள்ளுங்கள், நம்பிக்கையுடன் இருங்கள். மேலும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்" என்று நீட்டா அம்பானி கூறினார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் தற்போது போலவே, அப்போதும் மும்பை அணி தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பெற்றது. முதல் ஐந்து போட்டிகளில் தொடர் தோல்வியை அடுத்து ஆறாவது போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அதனை அடுத்து பெங்களூர் அணியை வென்றாலும், சென்னைக்கு எதிரான அடுத்த போட்டியில் தோல்வி மீண்டும் கிடைத்தது. மும்பை இனி அவ்வளவுதான், வெளியேறிவிட்டது என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், திடீர் விஸ்வரூபம் எடுத்த அந்த அணி யாருக்கு எதிராக தோற்றதோ அந்த அணிகளை அடித்து துவைத்து தொடர் வெற்றிகளை பெற்று பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. பிளே-ஆப் சுற்றில் மும்பை வெளியேறியது என்றாலும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அதேபோல் 2015 ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் தோல்வியையே சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி, அந்த தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது நினைவிருக்கலாம்.
இதையும் படிக்கலாம்: தொடர்ச்சியாக 4 தோல்விகள் ! ஆனாலும் சென்னை சாம்பியன்! திரும்புமா ’2010’ மேஜிக் வரலாறு!