விளையாட்டு

யுஏஇ மைதானங்களில் ஐபிஎல் எப்படியிருக்கும்..? ஒரு சிறப்புப்பார்வை..!

யுஏஇ மைதானங்களில் ஐபிஎல் எப்படியிருக்கும்..? ஒரு சிறப்புப்பார்வை..!

webteam

நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் வரும் சனிக்கிழமை அன்று யுஏஇ-ல் உள்ள அபுதாபி மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவில் நடைபெறயிருந்த ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக இந்த முறை முழுவதும் யுஏஇ-ல் (ஐக்கிய அரபு அமீரகத்தில்) நடைபெறவுள்ளது. அபுதாபி, ஷர்ஜா மற்றும் துபாய் ஆகிய மூன்று மைதானங்களில் மட்டும் தொடரின் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளன. இதனால் கிரிக்கெட் கணிப்பாளர்கள் பலரும் போட்டியின் போக்கு எப்படி இருக்கும் என்றும், மைதானங்களில் பங்கு என்ன என்றும் கணித்து வருகின்றனர்.

ஏனென்றால் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் அதில் மைதானத்தின் பங்கு குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். உதாரணத்திற்கு சுழற்பந்து வீச்சு நன்றாக எடுபடும் ஒரு மைதானத்தில் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு களமிறங்கினால் அந்த அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவுதான். அத்துடன் முதல் பேட்டிங்கிற்கு சாதகமான ஒரு மைதானத்தில், டாஸ் வென்ற ஒரு அணி 2வது பேட்டிங்கை தேர்வு செய்தால், பின்னர் எதிரணியின் ரன்களை சேஸிங் செய்வதில் சிரமம் ஏற்பட்டு விடும். இதனால் எதிரணிக்கு ஏற்றாற்போல அல்லாமல், மைதானத்திற்கு ஏற்றாற்போலவும் ஒரு அணி திட்டமிட்டு ஆட வேண்டியது அவசியமாகும்.

அந்த வகையில் இந்த முறையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ள அபுதாபி ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகியவை குறித்து பார்ப்போம்.

அபுதாபி ஷேக் சையத் மைதானம் :

2004ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மைதானத்தின் அரங்கம் 20 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அமைக்கப்பட்டது. டி20 போட்டிகளில் பவுலிங் வலுவான அணிக்கே இந்த மைதானம் சாதகமாக இருக்கும். இதுவரை 44 டி20 போட்டிகள் இங்கு நடந்துள்ளன. இதில் 19 முறை முதல் பேட்டிங் செய்த அணியும், 25 முறை சேஸிங் செய்த அணியும் வெற்றி பெற்றிருக்கின்றன. முதல் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக இந்த மைதானத்தில் 140 ரன்களை எடுத்துள்ளன.

இந்த மைதனாத்தில் அதிகபட்ச ரன் குவிப்பாக 225 ரன்கள் இருக்கிறது. குறைந்த பட்ச ரன் சேர்ப்பாக 87 ரன்கள் உள்ளது. சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோராக 166 ரன்களும், குறைந்தபட்ச இலக்குடன் வெற்றி பெற்றது 129 ரன்களாகவும் இருக்கிறது. வேகப்பந்து, சுழற்பந்து என இரண்டும் எடுபடக்கூடிய இந்த மைதானத்தில், அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன்களே அதிக ரன்களை எடுக்க வாய்ப்புள்ளது. நடப்பு ஆண்டின் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான முதல் ஐபிஎல் போட்டி வரும் சனிக்கிழமை இந்த மைதானத்தில் தான் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜா மைதானம் :

இது பழமையான ஒரு கிரிக்கெட் மைதானம் ஆகும். 1982ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மைதானம் 16,000 பார்வையாளர்கள் அமரும்படி வடிவமைக்கப்பட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டு 27,000 ஆயிரம் பேர் உட்காரும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. டி20 போட்டிகளை பொறுத்தவரையில் இந்த மைதானம் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையும்.

இதுவரை 13 டி20 போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. இதில் 9 போட்டிகளில் முதல் பேட்டிங் செய்த அணியும், 4 போட்டிகளில் மட்டுமே 2வது பேட்டிங் செய்த அணியும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த மைதானத்தில் அதிகபட்ச ரன் குவிப்பாக 215 ரன்களும், குறந்தபட்ச ரன் குவிப்பாக 90 ரன்களும் இருக்கின்றன. 140 ரன்களே இந்த மைதானத்தில் அதிகபட்ச சேஸிங் ஆகும். அத்துடன் எதிர்த்து அடிக்கமுடியாத குறைந்தபட்ச இலக்கு 154 ரன்கள் ஆகும். சுழற்பந்து வீச்சாளர்களைவிட வேகப்பந்து வீச்சாளர்களுக்கே இந்த மைதானம் கூடுதலாக கைகொடுக்கும். பேட்டிங்கின்போது சீரான வேகத்தில் ரன்களை சேர்க்கும் பேட்ஸ்மேன்களுக்கு இந்த மைதானம் சாதகமாக அமையும்.

துபாய் மைதானம் :

2009ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மைதானத்தில் 25,000 பேர் அமரும் வசதி உண்டு. இதுவரை 61 டி20 போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. இதில் 34 முறை முதல் பேட்டிங் செய்த அணியும், 26 முறை சேஸிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன. டி20 போட்டியில் அதிகபட்சமாக 211 ரன்கள் இங்கு அடிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக 71 ரன்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதிகபட்ச சேஸிங் இலக்காக 183 ரன்களும், 2வது பந்துவீச்சில் வென்ற குறைந்த இலக்காக 134 ரன்களும் இருக்கின்றன. முதல் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதமாக இருக்கும் இந்த மைதானம், பந்துவீச்சுக்கு பக்கபலமாக அமையும். இந்த மைதானத்தில் முதல் பேட்டிங்கின்போது வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். 2வது பேட்டிங்கின்போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்டுகள் விழ வாய்ப்புகள் அதிகம்.

மைதானங்களின் தன்மையை கடந்தும் பல நேரங்களில் திறமையான வீரர்கள் தங்கள் சாகசங்களை படைத்த கதை கிரிக்கெட்டில் ஆயிரம். எனவே இந்த ஐபிஎல் தொடரில் எத்தனை மாயங்களை கிரிக்கெட் மன்னர்கள் படைக்க இருக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.