விளையாட்டு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் vs மும்பை இண்டியன்ஸ் - கோலிக்கு வெற்றி கிடைக்குமா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் vs மும்பை இண்டியன்ஸ் - கோலிக்கு வெற்றி கிடைக்குமா?

webteam

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கோலி தலைமையிலான பெங்களூர் அணி முந்தைய போட்டியில் மோசமான தோல்வியைக் கண்டுள்ளதால் வெற்றி முகத்திற்கு திரும்பும் முனைப்பில் தயாராகி‌ வருகிறது. ரோகித்‌ சர்மா தலைமையிலான மும்பை அணி வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் ஆயத்தமாகி வருகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 16 ஆட்டங்களிலும், பெங்களூர் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌இன்றைய போட்டியில் களம் காணவுள்ள பெங்களூர் மற்றும் மும்பை அணிகளின் பலம் பலவீனம் என்ன என்பதை பார்க்கலாம்.

 விளையாடிய முதல் போட்டியில் அசத்தல் வெற்றி, இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வி என ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. பேட்டிங்கில் டிவில்லியர்ஸ் மட்டுமே நம்பிக்கையளிக்கும் ஃபார்மில் உள்ளார். கேப்டன் விராட் கோலி, மூத்த வீரர் ஃபின்ச் , ஆல்ரவுண்டர் ஷிவம் தூபே ஆகியோர் ரன்களைச் சேர்க்க சிரமப்பட்டு வருகின்றனர். கீப்பர் பிலிஃப் தடுமாறி வருவதால் இன்றைய போட்டியில் பார்த்திவ் படேல் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவுலர்கள் சாஹல், சைனி, வாஷிங்டன் சுந்தர் மட்டுமே நல்ல எகானமியுடன் பந்து வீசி வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், ஸ்டெய்ன் ஆகியோர் ரன்களை வாரி வழங்கி வருவது அணிக்கு பெரும் பலவீனமாக உள்ளது. ஃபீல்டிங்கிலும் பெங்களூர் அணி தடுமாறி வருகிறது.

மும்பை அணியைப் பொறுத்தவரையில் சென்னையுடன் தோல்வியைக் கண்டாலும், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்தது.

கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதிரடி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு இருவரும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகின்றனர். பந்து வீச்சில் பும்ரா, பேட்டின்சன், போல்ட் ஆகிய மூவரும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக விளங்கி வருகின்றனர். ராகுல் சாஹர் , க்ருனால் பாண்ட்யா இருவரும் சுழற்பந்து வீச்சின் மூலம் வலு சேர்க்கின்றனர்.