விளையாட்டு

கொல்கத்தாவுக்கு தண்ணிக் காட்டிய சிஎஸ்கே ! 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தாவுக்கு தண்ணிக் காட்டிய சிஎஸ்கே ! 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

webteam

கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 23வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் வீரர்கள் சொதப்ப ஆரம்பித்தனர். இதனால் கொல்கத்தா அணி 4 ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் வந்த ரஸல் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை 100-ஐ தாண்டச் செய்தார். ஒருவழியாக 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத ரஸல் 44 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் மற்றும் இம்ரான் தஹிர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 

இதனையடுத்து 109 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் சற்று அதிரடி காட்டியது வாட்சன் சாவ்லா வீசிய முதல் ஓவரில் 12 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் நரேன் வீசிய மூன்றாவது ஒவரில் வாட்சன் 9 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னாவும் 14 ரன்களில் சுனில் நரேனின் சுழலில் அவுட் ஆனார். இதனால் சென்னை அணி 5 ஒவர்களில் 35 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 

எனினும் அம்பத்தி ராயுடு மற்றும் டு பிளெஸ்ஸிஸ் ஜோடி சேர்ந்து சீராக ரன்களை சேர்த்தனர். இவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டிற்கு 46 ரன்கள் சேர்த்தனர். ராயுடு 21 ரன்களில் சாவ்லா பந்துவீச்சில் வெளியேறினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டு பிளெஸ்ஸிஸ் 45 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். சென்னை அணி 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 5வது வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. சிறப்பாக பந்துவீசிய தீபக் சாஹர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.