விளையாட்டு

கொல்கத்தா மிரட்டலில் பணிந்தது டெல்லி

கொல்கத்தா மிரட்டலில் பணிந்தது டெல்லி

webteam

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. டெல்வி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

11வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இந்தப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி கொல்கத்தாவை பேட்டிங் செய்ய பணித்தது.

அதன்படி கிறிஸ் லின், சுனில் நரைன் களமிறங்கினர். டெல்லிக்காக தனது முதல் ஒவரை வீசிய போல்ட் அந்த ஒவரை மெய்டனாக வீசி கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அவரது அடுத்த ஓவரில் சுனில் நரைன் 1 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். போல்ட்- கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி வீரர்கள் திணறினர். குறிப்பாக அதிரடி ஆட்டக்காரரான லின் முதலில் மிகவும் சிரமப்பட்டார். இதனை பார்க்கும் போது கொல்கத்தா அணி 150 - 160 ரன்கள் தான் எடுப்பார்கள் என ரசிகர்கள் எண்ணினர். ஆனால் பின்னர் களமிறங்கிய நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டனர் இவர்களின் அதிரடியால் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராணா 35 பந்துகளில் 59 ரன்களும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 12 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 41 ரன்களும் விளாசினர். ராபின் உத்தப்பா 35 ரன்களும், தொடக்க வீரர் கிறிஸ் லின் 31 ரன்களும் குவித்தனர்.

டெல்லி அணியில் ராகுல் திவேதியா 3 விக்கெட்டுகளும், டிராவிஸ் போல்ட், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பின்னர் பெரிய இழக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி கொல்கத்தாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ரிஷப் பந்த், மேக்ஸ் வெல்லை தவிர அந்த அணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

ரிஷப் - மேக்ஸ் வெல் ஆட்டம் அந்த அணி கவுரவமான ஸ்கோரை மட்டுமே எடுக்க உதவியது. முடிவில் டெல்லி அணி 14.2 ஓவர்களுக்கு 129  ரன்களுக்கு சுருண்டது. சுனில் நரைன், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தி கொல்கத்தாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். கொல்கத்தா அணி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.