விளையாட்டு

அம்லா செஞ்சுரி அம்போ: பஞ்சாப் மீண்டும் பஞ்சர்

அம்லா செஞ்சுரி அம்போ: பஞ்சாப் மீண்டும் பஞ்சர்

webteam

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தது. அந்த அணியின் அம்லா அடித்த செஞ்சுரி வீண் ஆனது.

ஐபில் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில், தொடக்க வீரர்களாக அம்லாவும், ஷான் மார்சும் களம் இறங்கினர். மார்ஷ் 26 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த விருத்திமான் சஹா 11 ரன்களில் வெளியேற, 10 ஓவர்களில் பஞ்சாப், 69 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து அம்லாவுடன், இணைந்த கேப்டன் மேக்ஸ்வெல் மட்டையைச் சுழற்ற ஸ்கோர் மளமளவென ஏறியது. அம்லாவும் தன் பங்குக்கு விளாசினார். மேக்ஸ்வெல் 40 ரன்களில் பும்ராவின் பந்து வீச்சில் போல்டாக, நிலைத்து நின்ற ஆம்லா, மும்பை பந்துவீச்சாளர்களை வதம் செய்து சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப், 198 ரன்கள் குவித்தது. அம்லா 104 ரன்கள் (60 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து களமிறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே அடித்து ஆடினர். பார்த்தீவ் பட்டேலும், பட்லரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தனர். பட்டேல் 37 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து பட்லருடன், நிதிஷ் ராணா இணைந்து, பஞ்சாப் பந்து வீச்சை பஞ்சராக்கினர். பட்லர் 77 ரன்களில் (37 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆக, நிதிஷ் ராணா-ஹர்திக் பாண்ட்யா ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. 15.3 ஓவர்களில் 199 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை. தொடர்ச்சியாக மும்பை ற்ற 5-வது வெற்றி இது.