விளையாட்டு

சிட்னி போட்டியில் காயத்துடன் விளையாடிய விஹாரி பிரிஸ்பேன் டெஸ்டில் விலகல்

சிட்னி போட்டியில் காயத்துடன் விளையாடிய விஹாரி பிரிஸ்பேன் டெஸ்டில் விலகல்

rajakannan

பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணி வீரர் ஹனுமன் விஹாரி விலகி உள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் ஐந்தாம் நாளான நேற்று 407 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடி வந்த இந்திய அணி. ஐந்தாவது நாளில் மட்டும் 300 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியிருந்தது. அதனால், இந்திய அணி எப்படியும் தோல்வியை தழுவும் என்றே கணிக்கப்பட்டது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணியிடம் உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் நிறையவே இருக்கிறார்கள். பேட் கம்மின்ஸ், ஸ்டார்க் வேகத்திற்கு எப்படி இந்திய வீரர்கள் ஈடு கொடுப்பார்கள் என்ற கேள்வி இருந்தது. ஒருவேளை ரகானா மற்றும் புஜாரா ஜோடி நிலைத்து ஆடினால் போட்டி டிரா ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

ஆனால், ரகானே 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். எதிர்பாராத விதமாக ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 118 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஜாராவும் 205 பந்துகளில் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 272 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. களத்தில் விஹாரியும், அஸ்வினும்தான் இருந்தனர். மேலும் 40 ஓவர்களுக்கு மேல் விளையாடி வேண்டி இருந்தது. களத்தில் ஒரு பேட்ஸ்மேன் என்ற வகையில் விஹாரி மட்டுமே இருந்தார். அஸ்வின் ஒரு ஆல்ரவுண்டர்.

அந்த நேரத்தில்தான் விஹாரி ஒரு முடிவு செய்து கிளாசிக்கான டெஸ்ட் விளையாடினார். அஸ்வின் கூட சில பவுண்டரிகளை அடித்தார். ஆனால், முதல் 100 பந்துகளுக்கு விஹாரி வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலிய வீரர்களை சோதித்தார். இறுதிவரை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டியது இந்த ஜோடி. இறுதியில், 131 ஓவர்கள் விளையாடி 334 ரன்கள் எடுத்தது இந்திய அணி. இந்தப் போட்டியில் விஹாரி 161 பந்துகளை சந்தித்து 23 ரன்களும், அஸ்வின் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்களும் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்து போட்டியை டிரா செய்தனர்.

இந்தப் போட்டியில் தன்னுடைய காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் விஹாரி விளையாடினார். அதனால், பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் விஹாரி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.