விளையாட்டு

“எவ்வளவு கேட்சுகள்தான் கோட்டை விடுவீர்கள்”: ரிஷப் பண்ட் மீது எழும் அடுக்கடுக்கான கேள்விகள்

“எவ்வளவு கேட்சுகள்தான் கோட்டை விடுவீர்கள்”: ரிஷப் பண்ட் மீது எழும் அடுக்கடுக்கான கேள்விகள்

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வில் புக்கோவ்ஸ்கி கொடுத்த கேட்சை இரண்டு முறை டிராப் செய்துள்ளார். 2018 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான விக்கெட் கீப்பர் என்ற வேதனை கொடுக்கும் சாதனையை படைத்துள்ளார். அதற்கு காரணம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நழுவவிட்ட கேட்ச்கள் தான். 

பேட்டிங்கிலும் பெரிய பங்களிப்பு கொடுக்காமல், விக்கெட் கீப்பிங்கிலும்  தொடர்ந்து சொதப்பி வரும் பண்டுக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் வைக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். அனுபவ வீரர் சாஹாவுக்கு பதிலாக பண்ட் தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வருகிறார். எப்படியும் அடுத்த போட்டியில் அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு இருக்காது என்ற பேச்சுகளும் எழுகின்றன. அவருக்கு கீப்பிங்கில் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளனர் முன்னாள் வீரர்கள். 

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த போது இடது முழங்கை பகுதியில் காயம்பட்டிருந்தார். அதை ஸ்கேன் செய்து பார்த்ததில் பெரிய  பாதிப்பு ஏதும் இல்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.