விராட் கோலியின் அதிரடியான சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன் குவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கடந்தப் போட்டியில் 152 ரன் விளாசிய ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் 29 ரன்னில் ஆட்டமிழக்க, விராட் கோலியும், ராயுடுவும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ராயுடு 80 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 106 பந்துகளில் சதம் அடித்தார்.
தோனி 20, பண்ட் 17, ஜடேஜா 13 என என அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்தாலும், விராட் கோலி தனி ஆளாக கடைசி வரை நிலைத்து நின்று ஆடினார். விராட் கோலி 129 பந்துகளில் 157 ரன் குவிக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. விராட் 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் விளாசினார்.
இந்தப் போட்டியில், 81 ரன்கள் எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலிக்கு இந்தப் போட்டியில் அடித்தது 37வது சதம் ஆகும். முதல் ஒருநாள் போட்டியில் 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த இவர், தற்போது இரண்டாவது போட்டியிலும் சதம் அடித்துள்ளார். விராட் கோலி 157 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சேர்ந்து வெறும் 156 ரன் மட்டுமே எடுத்தனர். எக்ஸ்ட்ராவாக 8 ரன் கிடைத்தது. இந்த ஆண்டில் மட்டும் விராட் கோலி இதுவரை 5 சதங்களும், 3 அரைசதங்களும் விளாசியுள்ளார். இந்த ஆண்டி வெறும் 11 இன்னிங்சில் 1000 ரன்கள் எடுத்துள்ளார்.