வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து விளையாடிய அந்த அணி மேற்கொண்டு 16 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் இழந்தது. ரோஸ்டன் சேஸ் 106, ஹோல்டர் 52 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட் சாய்த்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 311 குவித்து ஆட்டமிழக்க, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. கே.எல்.ராகுல் 4, புஜாரா 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். பிரித்வி ஷா தனது அதிரடியால் மிரட்டி ஒரு சிக்ஸர் 11 பவுண்டரிகளுடன் 53 பந்தில் 70 ரன் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் விராட் கோலி 45 ரன் எடுத்து அவுட் ஆனார். விராட் கோலி ஆட்டமிழந்த உடன் இந்திய அணி ஆட்டம் கண்டு விடும் என்று தெரிந்தது. அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்திருந்தது. அதன்பிறகு ரகானே, ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பண்ட் 67 பந்திலும், ரகானே 122 பந்திலும் அரைசதம் அடித்தனர்.
இந்திய அணி இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்தது. ரகானே 75, ரிஷப் பண்ட் 85 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு இதுவரை 146 ரன்கள் சேர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 2 விக்கெட் சாய்த்தார். அனுபவம் வாய்ந்த வீரர்களாக கேப்டன் விராட் கோலி, ரகானே இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தாலும், இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் மிரட்டி விட்டனர். இருவரின் ஆட்டமும் மிகவும் அற்புதமாக இருந்தது.