விளையாட்டு

யு-19 உலகக் கோப்பை : 5-வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா? - இங்கிலாந்துடன் இன்று மோதல்

யு-19 உலகக் கோப்பை : 5-வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா? - இங்கிலாந்துடன் இன்று மோதல்

சங்கீதா

19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.சி.சி.யின் 19 வயதுக்குட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில், யஷ் துல் தலைமையிலான இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அபாரமாக விளையாடி வெற்றிகளைக் குவித்து வருகிறது. லீக் சுற்றின் பி பிரிவில் ஹாட்ரிக் வெற்றியுடன் நாக்ட் அவுட் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, காலிறுதியில் வங்கதேச அணியையும், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி, 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி, காலிறுதியில் தென்னாப்ரிக்காவையும், அரையிறுதியில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

ஆன்டிகுவா, விவியன் மைதானத்தில் நடக்கும் இந்தப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30-க்கு தொடங்குகிறது. 4 முறை (2000, 2008, 2012, 2018) கோப்பையை வென்றுள்ள இந்தியா, 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.

அதேநேரத்தில், கடந்த 1998-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதனால் இங்கிலாந்து அணியும் 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற கடுமையாக போராடும். இரண்டு அணிகளும் கோப்பையை கைப்பற்ற தீவிரமாக உள்ளதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: அங்க்ரிஸ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங், ரஷீத், யாஷ் துல் (கேப்டன்), ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர், நிஷாந்த் சிந்து, தினேஷ் பானா, கவ்ஷல் தாம்பே, ராஜ் பாவா, விக்கி ஆஸ்ட்வால், ரவிகுமார்.

இங்கிலாந்து: ஜார்ஜ் தாமஸ், ஜேக்கப் பெத்தேல், டாம் பிரிஸ்ட் (கேப்டன்), ஜேம்ஸ் ரீவ், வில்லியம் லக்ஸ்டன், ஜார்ஜ் பெல், ரீஹன் அகமது, அலெக்ஸ் ஹார்டன், ஜேம்ஸ் சேல்ஸ், தாமஸ் ஆஸ்பின்வால், ஜோஷ்வா பாய்டென்.