உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நாளை நடக்க இருப்பதால், நாளை நடக்க இருந்த இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி, நாட்டிங்காமில் நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 49.5 ஓவர்களில் 268 ரன்கள் எடுத்தது. ஜோஸ் பட்லர் 53 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக ஆடி, 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அவரது சிறப்பான பந்துவீச்சு.பின்னர் ஆடிய இந்திய அணி, 40.1 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 137 ரன்களும் விராத் கோலி 74 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டி லாட்ஸில் இன்று நடக்கிறது.
இந்தப் போட்டியில், இந்திய அணியில் அதிக மாற்றம் இருக்காது. சித்தார்த் கவுலுக்குப் பதில் புவனேஷ்வர்குமார் மீண்டும் சேர்க்கப்படலாம். குல்தீப் யாதவின் பந்துவீச்சு மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நஸீர் ஹூசைன், ‘குல்தீப்பை சமாளிக்க ஏதாவது செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். தற்போதைய கேப்டன் மோர்கனும், மற்ற சுழல் பந்துவீச்சாளர்களிடம் இல்லாத ஒன்று குல்தீப்பிடம் ஏதோ இருப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவரது பந்துவீச்சை சமாளிக்கும் விதமாக கடும் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர் அந்த அணியினர்.
இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். கடந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஜோஸ் பட்லரும் சிறப்பாக ஆடினர். அதோடு தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோரும் ஃபார்மில் உள்ளனர். ஆனாலும் குல்தீப்,. சேஹல் பந்துவீச்சுகளில் அவர்கள் தடுமாறுவது இந்திய அணியின் பலம்.
கடந்த போட்டியில் அடைந்த போட்டிக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி, அனைத்து வகையிலும் இன்று முயற்சிக்கும் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும். இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இந்தப் போட்டி நாளை நடப்பதற்குத்தான் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நாளை உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடக்க இருப்பதால் ஒரு நாள் முன்னதாக போட்டியை மாற்றி இன்று நடத்துகின்றனர்.
.