விளையாட்டு

சரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி

சரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி

webteam

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. 

பெர்த் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதல் நாளான நேற்று ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்து இருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய அந்த அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் ஹரிஸ் 70, ஹெட் 58, பின்ச் 50 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்கள் சாய்த்தார். பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி தலா இரண்டு விக்கெட்கள் சாய்த்தனர். 

இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது. தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. முரளி விஜய் டக் அவுட் ஆக, கே.எல்.ராகுல் 2 ரன்னில் நடையைக் கட்டினார். 8 ரன்னில் இரண்டு விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறியது.  இதனையடுத்து, கேப்டன் விராட் கோலியும், புஜாராவும் ஆட்டத்தை கையிலெடுத்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருப்பினும், இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் புஜாரா 24 ரன்னில் ஏமாற்றினார்.

இதனையடுத்து, கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். விராட் 82, ரகானே 51 ரன்களுடன் இரண்டாம் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி மேற்கொண்டு 200 ரன்கள் சேர்த்தால்தான், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.