விளையாட்டு

உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! ஆனாலும் கார்ல்சன்தான் சாம்பியன்-எப்படி?

உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! ஆனாலும் கார்ல்சன்தான் சாம்பியன்-எப்படி?

ச. முத்துகிருஷ்ணன்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மயாமியில், ‘மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர்’ தொடரின் ஒரு பகுதியாக கிரிப்டோ கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா உள்ளிட்ட உலகின் 8 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

முதல் நான்கு சுற்றில் வெற்றி பெற்ற தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, ஐந்தாவது சுற்றில் சீனாவின் குவாங் லீம் லீயிடமும், ஆறாவது சுற்றில் போலந்தின் ஜான்–கிரிஸ்டோப் டுடாவிடமும் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதையடுத்து புள்ளிப் பட்டியலில் மேக்னஸ் கார்ல்சன் முதலிடத்திலும், பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்திலும் இருந்தனர்.

7-வது சுற்றான இறுதிப்போட்டி கார்ல்சன் - பிரக்ஞானந்தா இடையே நேற்று நடைபெற்றது. இதில் பிரதான போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், டை பிரேக்கரில் கார்ல்சனை வென்று வெற்றியைத் தனதாக்கினார் பிரக்ஞானந்தா. இருப்பினும் கார்ல்சன் 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, பிரக்ஞானந்தா 15 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்தார்.

ஒரு புள்ளியில் துரதிர்ஷ்டவசமாக சாம்பியன் பட்டத்தை தவற விட்டார் பிரக்ஞானந்தா. உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்த ஆண்டில் மட்டும் 3 வது முறையாக வீழ்த்தி தமிழத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.