ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் அக் 2 (7) மற்றும் ஃபகார் ஜமான் 0 (9) ரன்களில் வெளியேறினர். இதையடுத்து வந்த பாபர் அசாம் மற்றும் சொயப் மாலிக் ஆகியோர் நிலைத்து விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். பின்னர் அவர்களும் 47 (62), 43 (67) என அரைசதம் அடிக்காமல் அவுட் ஆகினர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், அந்த அணி 165 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதற்கிடையே ஃபஹீம் அஷரஃப் 21 ரன்கள் எடுத்தார். முகமது அமீர் 18 ரன்களில் ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் இருந்தார். 43.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் புவனேஸ் குமார் மற்றும் கேதர் ஜாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து 163 என்ற எளிமையான இலக்கை எதிர்த்து இந்தியா விளையாடியது இந்தியா. இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவாண் ஆகியோர் களமிறங்கினர்.
முதல் 5 ஓவரில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மாவும் ஷிகர் தவாணும், பின்பு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புயலுக்கு முன்பு அமைதி என்பது போல ரோகித் சர்மா திடீரென அதிரடியாக ரன்கள் சேர்க்க தொடங்கினார். அமைதியாக இருந்த மைதானத்தில் சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசினார், 39 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்தபோது ஷதாப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்பு, ஷிகர் தவாணும் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ராயுடுவும், தினேஷ் கார்த்திக்கும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் இந்தியா 29 ஓவரில் 164 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது. ராயுடுவும், தினேஷ் கார்த்திக்கும் தலா 31 ரன்களை எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.