விளையாட்டு

WTC Finals: இந்தியாவின் ஆடும் 11 மாற்றப்படுமா? அனுமதி உண்டா?

WTC Finals: இந்தியாவின் ஆடும் 11 மாற்றப்படுமா? அனுமதி உண்டா?

jagadeesh

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி ஆட்டத்திற்கு இந்தியாவின் 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெறுகிறது. இதில் முதல் நாளில் விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் நாள் ஆட்டம் கை விடப்பட்டாலும் அதை ஈடுகட்டும் வகையில் ஆறாவது நாள் போட்டி நடைபெறும். அதன்படி இந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஜூன் 23 ஆம் தேதி.

இந்நிலையில் சவுத்தாம்டனில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு குறைவாக இருப்பதால் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை ஜூன் 17 ஆம் தேதி மாலை அறிவித்தது இந்திய அணி. தற்போது ஐந்து நாட்கள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆடுகளம் ஸ்விங்கிற்கு அதிகமாக ஒத்துழைக்கும். இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா,  ஆகியோர் உள்ளனர். இதனால் இந்திய அணியில் ஜடேஜாவை நீக்கிலிட்டு இளம் வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஆடும் லெவன் அணியை அறிவித்தபின் இந்திய அணியால் அதை மாற்ற முடியுமா? என்ற கேள்வியும் எழும்பலாம். ஆனால் டாஸ் போடுவதற்கு முன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆடும் லெவன் அணியை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் ஆடும் லெவன் இறுதி செய்யப்படும். இதனால் இந்திய அணியை ஆடும் லெவன் அணியை மாற்ற வாய்ப்புள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஐசிசி-யின் விதிப்படி, இரண்டு அணி கேப்டன்களும் 11 பேர் கொண்ட ஆடும் லெவன், 4 மாற்று வீரர்கள் கொண்ட பட்டியலை ஐசிசி-யிடம் ஒப்படைக்க வேண்டும் அவ்வளவே.