விளையாட்டு

நியூசிலாந்தை "ஒயிட் வாஷ்" செய்தது இந்தியா !

நியூசிலாந்தை "ஒயிட் வாஷ்" செய்தது இந்தியா !

jagadeesh

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5ஆவது டி20 போட்டியை வென்றதன் மூலம் 5 போட்டிகளை கொண்ட தொடரை ஒயிட் வாஷ் செய்தது இந்திய கிரிக்கெட் அணி.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 3ஆவது மற்றும் 4ஆவது டி20 போட்டிகளில் சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மவுன்கவுயி நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 20 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. இந்தியா பேட்டிங் செய்தபோது அதிரிடியாக விளையாடிய ரோகித் சர்மா 41 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தபோது "ரிட்டையர் ஹர்ட்" ஆனார். இதனால் இந்தியா பீல்டிங் செய்ய வந்தபோது கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குப்திலும், மன்ரோவும் 2 மற்றும் 15 ரன்களில் விரைவாக ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ராஸ் டெய்லரும், செஃப்ரட்டும் சிறப்பாக விளையாடி முறையே 50 மற்றும் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இவரைகளையடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. மிக முக்கியமாக கடைசி 5 ஓவரில் இந்திய பவுலர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரை அபாரமாக கைப்பற்றியது. இந்திய பவுலர்களில் பும்ரா 3, சைனி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இவ்விரு அணிகள் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்குகிறது.